அமெரிக்காவில் குப்பைகளை அகற்றியவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

அமெரிக்காவில் குப்பைகளை அகற்றியவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

அமெரிக்காவில் நடைபெறும் போராட்டத்தால் சாலைகளில் குவிந்த குப்பைகளை அப்புறப்படுத்த தூய்மை பணியில் ஈடுபட்ட இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பினத்தவரின் கழுத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் முழங்கால் வைத்து அழுத்தியதால் அவர் மூச்சுவிட முடியாமல் உயிரிழந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து கருப்பின மக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக தீவிர போராட்டம் நடந்து வருகிறது.

வன்முறை சம்பவங்களால் போராட்டம் நடந்த இடங்களில் அதிக அளவில் குப்பைகள் சேர்ந்துள்ளன.

இந்நிலையில் பஃபலோ நகரை சேர்ந்த 18 வயதான ஆண்டனியோ குவைன் என்ற இளைஞர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு இந்தக் குப்பைகளை அப்புறப்படுத்த 10 மணி நேரங்களாக ஒவ்வொரு தெருவாக சென்று தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் செய்தி நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு தெரியவந்ததையடுத்து பலரும் இளைஞருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுவேளை அதே பகுதியைச் சேர்ந்த மட் பிளாக் என்பவர் இளைஞரின் சேவையை பாராட்டி அவரது ஃபோர்டு மஸ்டங் காரினை பரிசாக அளித்துள்ளார்.

அதே போல் இளைஞர் பஃபலோவில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவரது படிப்பு செலவை கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

போராட்டம் நடைபெற்று வரும் நிலையிலும் மற்றவர்களின் நலனை கருத்தில் கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்ட இளைஞரின் நல் உள்ளத்தை மக்கள் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.