பெப்ரவரி மாதம் முதல் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் ஆரம்பம்

பெப்ரவரி மாதம் முதல் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் ஆரம்பம்

இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
 

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 

வீதி அபிவிருத்திக்காக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 150 மில்லியன் ரூபாவும் சிறிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 50 மில்லியன் ரூபாவும் கிராமிய அலுவல்கள் அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது.
 

2024ஆம் ஆண்டுக்கான கடன் மறுசீரமைப்பு குறித்து கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
 

இதன் இறுதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் பின்னர் பெப்ரவரி மாதம் முதல் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.
 

இந்த ஆண்டு வீதிகளை அபிவிருத்தி செய்ய உலக வங்கி கடன் உதவியின் கீழ் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளன.
 

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் வீதிகளை புனர்நிர்மாணம் செய்ய சவூதி அரேபியாவின் நிதியுதவி பெறப்பட்டுள்ளது.
 

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
 

தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் ஆரம்பிக்க தயாராக உள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.