இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
2025 ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு முழுவதும் 40,633 டெங்கு நோயாளர்கள் பதிவாகியதோடு 22 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் டாக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெரும்பாலான நோயாளிகள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அதிக அவதானமான 11 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் ஆகும்.

இதற்கிடையில், இதே காலகட்டத்தில் 22 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
பாடசாலைகள்,அரசு நிறுவனங்கள், மதஸ்தலங்கள் பொது இடங்கள் மற்றும் கைவிடப்பட்ட நிலங்கள் மற்றும் கட்டடங்களிலேயே டெங்கு நுளம்பு அதிகம் உருவாகுவதாகவும், ,மழைக் காலம் ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து அவதானமாக செயற்படுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, டெங்கு நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை முடிந்தவரை அழித்து சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான சிகிச்சையைப் பெறுமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.