மத்திய மலைநாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மத்திய மலைநாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலைநாட்டில் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும், இதனால் மக்கள் கடும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர் மழையுடன் அடிக்கடி பனிமூட்டம் காணப்படுவதனால் வளைவுகள் நிறைந்த மலையக வீதிகளை பயன்படுத்துவதில் சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், தமக்குரிய பக்கத்தில் வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு மெதுவாக செல்வதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

மத்திய மலைநாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Weather Forcast In Sri Lanka

இதேவேளை ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலகல, பிட்டவல, கினகத்தேனை, கடவல, தியகல, வட்டவளை, ஹட்டன் உள்ளிட்ட பகுதியிலும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளயார், தலவாக்கலை, ரதல்ல, நானுஓயா உள்ளிட்ட பகுதிகளிலும் அடிக்கடி வீதியில் பனிமூட்டம் காணப்படுகின்றன.

அத்தோடு குறித்த வீதியில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து விழுந்துள்ளதுடன் மண்சரிவு அபாயமும் காணப்படுகின்றன. எனவே இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என பொலிஸார் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய மலைநாட்டின் நீரேந்தும் பிரதேசகளுக்கு அதிக மழைவீழ்ச்சி கிடைத்து வருவதனால் நீர்வீழ்ச்சிகளினதும் நீர்த்தேக்கங்களினதும் நீர் மட்டம் உயர்ந்துள்ளன.

மத்திய மலைநாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Weather Forcast In Sri Lanka

இதனால் விமலசுரேந்திர, காசல்ரி, லக்ஸபான, நவலக்ஸபான, கெனியோன், மவுசாக்கலை, மேல்கொத்மலை, பொல்பிட்டிய உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்ந்து வருகின்றன.

மழைவீழ்ச்சி அதிகரித்தால் எவ்வேளையிலும் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்படலாம் என்பதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் ஆற்றுக்கு சமீபமாக இருக்கும் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பாக உள்ள பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.