இலங்கையில் ஆபத்தில் உள்ள இலட்சக்கணக்கானோர்.. சுகாதார அதிகாரிகள் கூறும் அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் 150,000இற்கும் மேற்பட்டவர்கள், எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் தொடர்பில் ஆபத்தில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் ஆண்டுகளில் நாட்டில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் சடுதியாக அதிகரிக்கும் என சுகாதார அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தேசிய பாலியல் தொற்று/எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின்படி, இலங்கையில் 127,511 அதிக ஆபத்துள்ள நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் பெண் பாலியல் தொழிலாளர்கள், ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள், போதைப்பொருட்களை ஊசி மூலம் செலுத்துபவர்கள், பீச் போய்ஸ்(கடற்கரைகளில் சுற்றித்திரியும் ஆண்கள்) மற்றும் திருநங்கைகள் ஆகியோர் அடங்குவர்.
அத்துடன், மேல் மாகாணம், காலி, கண்டி, குருநாகல், அனுராதபுரம், மாத்தறை மற்றும் பதுளை ஆகிய இடங்களில் இருந்து அதிக எச்.ஐ.வி தொற்று விகிதங்கள் பதிவாகியுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்கள் சங்க கூட்டணியின் தலைவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
மேலும், 2024ஆம் ஆண்டில், 39,547 நபர்கள் எச்.ஐ.வி உடன் வாழ்ந்து வருவதாகவும் 25,969 பேர் தங்கள் நிலையை அறிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாடசாலைகளில் பாலியல் தொடர்பான கல்வியின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
விழிப்புணர்வு, பாதுகாப்பு மற்றும் ஆரம்ப பரிசோதனை இல்லாமல், வரும் ஆண்டுகளில் இலங்கையில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொடர்பான நோய்கள் கடுமையாக அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.