இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 14 ஆவது பிரதமராக தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பதவி ஏற்றார்

இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 14 ஆவது பிரதமராக தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பதவி ஏற்றார்

இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின்  14 ஆவது பிரதமராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பதவி ஏற்றுள்ளார்.

இதன்படி, களனி ரஜமஹா விகாரையில் பதவியேற்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, மத அனுஷ்டானங்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப் பிரமானம் செய்துள்ளார்.

இதேவேளை, இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசு ஆட்சியில் அதிகூடிய அளவில் அதிகாரம் மிக்க பதவிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வகித்துள்ளார்.

2004ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியில், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக முதல் முறையாக பதவி வகித்தார்.

இதனைத் தொடர்ந்து, 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக இரண்டு முறை இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவி வகித்தார்.

2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி முதல்,  அதே ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி வரை இரண்டாவது முறையாக பிரதமராக செயற்பட்டார்.

இதனை அடுத்து, 2018ஆம் ஆண்டு டிசம்பர் முதல் ஓராண்டு காலம் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ பதவி வகித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாகவும் பிரதமராகப் பதவியேற்றார்.

இந்த நிலையில், கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் போட்டியிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களுடன் பாரிய வெற்றியைப் பெற்றுக் கொண்டது

இதன்படி, இந்த முறை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ பிரதமாராகப் பதவியேற்கும் நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.