அரச பாடசாலை மாணவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
அரச பாடசாலை மாணவர்கள் குறைந்த விலையில் ஊட்டச்சத்து குறைந்த சிற்றுண்டிகளை அதிகமாக உட்கொள்வதாகத் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகளைச் சேர்ந்த 463 மாணவர்களிடையே, இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச பாடசாலை மாணவர்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யக் கூடிய போசனைக் குறைந்த உணவை உட்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இளம் பருவத்தினரின் உணவுகள், அரிசி மற்றும் மா சார்ந்த உணவுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் வெளிப்படுத்துவதாக, ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் காய்கறிகள், கீரைகள் மற்றும் தானியங்களின் தினசரி நுகர்வு குறைவாக உள்ளதாகவும் இளம் பருவத்தினரின் துரித உணவு, சிற்றுண்டி மற்றும் சர்க்கரை பானங்களின் நுகர்வு அதிகரிப்பைக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் தனியார் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களை விட உடல் ரீதியாகக் குறைவான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலதிக வகுப்புக்கள் மற்றும் பரபரப்பான கால அட்டவணைகள் இதற்கு முக்கிய காரணிகளாக அமைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்துக் குறைவாகவே அக்கறை செலுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.