யாழ் சிறுவன் விவகாரம் ; வீட்டாருக்கு வந்த முக்கிய அழைப்பு, சர்ச்சையை கிளப்பும் பொலிஸார்
அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு 10ஆம் திகதி பொலிஸார் வெளியிட்ட ஊடக அறிவித்தலில் 17 வயது என குறிப்பிட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் 11ஆம் திகதி வெளியிட்ட மற்றுமொரு ஊடக அறிவித்தலில் 19 வயது என குறிப்பிட்டுள்ளார்கள்.
எனினும் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது.

அத்துடன் அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வட்டுக்கோட்டை பொலிஸார் என அடையாளப்படுத்திக்கொண்டு தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த நபர் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் நடக்கின்றன. நாங்கள் ஒரு திகதி சொல்லுவோம். அந்த திகதியில் நீதவானை சந்திக்க ஏற்பாடு செய்வோம். அன்றைய தினம் நீங்கள் நீதவானை சந்தித்து முழு விடயத்தையும் சொல்லலாம்.
அரசியல்வாதிகள் எவரேனும் வந்தால் அவர்களுடன் கதைக்க வேண்டாம்.அவர்கள் தங்கள் அரசியலுக்காக உங்களை குழப்பலாம். நாங்கள் உங்கள் மகனின் விடயத்திற்கு நீதியை பெற்று தருவோம். நீங்கள் எந்த போராட்டங்கள் எதிர்ப்புக்கள் இன்றி மகனின் இறுதி கிரியைகளை செய்யுங்கள் என தெரிவத்துள்ளார்.