பக்தர்கள் புடைசூழ வங்கக்கடலில் தீர்த்தமாடிய வல்லிபுர ஆழ்வார்!
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான சமுத்திர தீர்த்தோற்சவம் நேற்று (26) கற்கோவளம் வங்கக்கடலில் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வல்லிபுர ஆழ்வார், இலட்சுமி, பிள்ளையார் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களின் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கற்கோவளம் கடற்கரையை நோக்கி எழுந்தருளினர்.
கற்கோவளம் கடற்கரையில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, பிற்பகல் சுமார் 4.00 மணியளவில் வங்கக்கடலில் சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
பெருமளவான பக்தர்கள்
இந்த தீர்த்தோற்சவத்தில் வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆலய மகோற்சவம்11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், நேற்று முன்தினம் (25) தேர்த்திருவிழா இடம்பெற்ற நிலையில் நேற்று (26) சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று (27) காலை ஆலய வளாகத்தில் உள்ள தீர்த்தக் கேணியில் பட்டுத் தீர்த்தம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.