குகையில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமிக்குப் பிறந்த குழந்தையின் தந்தைக்கு சரீரப் பிணை
புதிய இணைப்பு
உடுதும்பர பகுதியில், சிறுமி ஒருவருடன் குகையில் வைத்து கைது செய்யப்பட்ட 23 வயதுடைய இளைஞரை 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல தெல்தெனிய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த இளைஞருக்கு உதவியதாகக் கூறப்படும் அவரது 31 வயதுடைய உறவினர் ஒருவரும் உடுதும்பர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இளைஞர் எதிர்வரும் ஜனவரி 13ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நக்கிள்ஸ் மலைத்தொடர் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 15 வயது சிறுமி மற்றும் அவரது குழந்தையின் எதிர்கால நலனுக்காக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றையும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வெளியிட்டுள்ளார்.
பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினை
அந்த அறிக்கையில், 'பாதுகாப்பற்ற முறையில் பிரசவித்த நிலையில் சிறுமி ஒருவர் குழந்தையுடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தனிப்பட்ட ஒரு சம்பவமாகக் கருத முடியாது, தற்போதைய பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளால் சிறுவர்கள் பல்வேறு வழிகளில் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
குறிப்பாக, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான தொடர்பாடல் மற்றும் நெருக்கம் குறைந்து வருவதும் இத்தகைய சம்பவங்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் காணப்படுகிறது.
எனவே, பிள்ளைகள் தமது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக இருப்பதாக உணரும் சூழலை உருவாக்குவதுடன், குடும்பங்களுக்குள் திறந்த உரையாடல்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
இதேவேளை, பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் உள்ள சிறுவர்களுக்கான முறையான தீர்வுகளை வழங்கும் நோக்கில், 2027ஆம் ஆண்டு முதல் புதிய மாற்றுப் பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதற்கான பாதீட்டு ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சிறுவர்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு என வலியுறுத்தியுள்ள அமைச்சர், சிறுவர்கள் தொடர்பான விடயங்களில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடனும் அக்கறையுடனும் செயற்பட வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

