இரவில் நடந்த கோரமான வாள்வெட்டு! ஒருவர் பலி - மூவர் படுகாயம்
மொனராகலை, படல்கும்புரை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கோரமான வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹயஸ் ரக வானொன்றில் வந்த இனந்தெரியாத வன்முறைக் கும்பலொன்றே இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை முன்னெடுத்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு படல்கும்புரை பிரதேசத்தில் நான்கு இளைஞர்கள் நின்றுகொண்டிருந்த வேளையில், அங்கு வந்த வன்முறைக் கும்பல் அவர்கள் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் படல்கும்புரை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த ஏனைய மூன்று இளைஞர்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலை நடத்திய பின்னர் வன்முறைக் கும்பல் வந்த வாகனத்திலேயே தப்பிச் சென்றுள்ளது.
தனிப்பட்ட பகையினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் தேடுதல் வேட்டையையும் ஆரம்பித்துள்ளனர்.