எரிபொருள் தட்டுப்பாடில்லை... கியூஆர் முறையை நீக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கையில் எரிபொருட்கள் தற்போது தட்டுப்பாடின்றி கிடைக்கப்பெறுவதால் அரசாங்கம் கியூஆர் முறையை நீக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் உலக சந்தையில் குறைவடைந்திருக்கும் எரிபொருட்களின் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் எரிபொருட்களுக்கான விலை குறைப்பு போதுமானதல்ல எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று (30) நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எரிபொருட்களின் விலை குறைப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அரசாங்கம் குறைத்துள்ளது. ஒரு லீற்றர் பெட்ரோல் 20 ரூபாயாலும் ஒரு லீற்றர் டீசல் 25 ரூபாயாலுமே குறைக்கப்பட்டிருக்கிறது.
எனினும் உலக சந்தையில் தற்போது எரிபொருட்களின் விலை குறைவடைந்துள்ள வீதத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் அரசாங்கத்தின் விலை குறைப்பு போதுமானதாக இல்லை.
ஏனெனில் உலக சந்தையில் விலை அதிகரிக்கும்போதெல்லாம் எமது நாட்டிலும் அதற்கு நிகராக விலை அதிகரிக்கப்பட்டது. அதனால் தற்போது உலக சந்தையில் விலை குறைவடையும்போது அதற்கு நிகராக விலை குறைவடையவேண்டும். அதுதான் நியாயம் ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம், தனது செலவுக்கு ஒத்துப்போகக்கூடிய வகையிலே சந்தையில் எரிபொருட்களின் விலைை நிர்ணயிக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம்
அந்த சந்தை விலை செலவுக்கு குறிப்பிட்டதொரு வீதம் சேர்த்தே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் எரிபொருள் கொள்வனவு செய்த விலை மற்றும் விற்பனை செய்யும் விலைக்கு மத்தியில் நட்டம் ஏற்படாத வகையில் விற்பனை செய்யுமாறே நாணய நிதியம் அரசாங்கத்துக்கு தெரிவித்திருக்கிறது.
அதனால் அரசாங்கம் தற்போது நாணய நிதியம் தெரிவித்துள்ளதான் பிரகாரம் செய்கிறதா இல்லையா? அவ்வாறு செய்யும்போது முறையற்ற இலாபம் பெற்றுக்கொள்ளவும் முடியாது. அதேநேரம் நட்டப்படவும் முடியாது. இதுதான் சரியான நிலைமை.

என்றாலும் சரியான தகவல் எமக்கு சமர்ப்பிக்கப்படாததால், தற்போது உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவடைந்துள்ள அளவுக்கு இங்கு விலை குறைவடையவில்லை என்றே எமக்கு தெரிவிக்க முடியும்.
அதேநேரம் நாட்டுக்கு எரிபொருள் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டதால், எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் கியூஆர் முறையில் எரிபொருளை விநியோகிக்க தீர்மானித்தது.
ஆனால் தற்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் எரிபொருள் கிடைப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. அதனால் கியூஆர் முறையை அரசாங்கம் நீக்க வேண்டும்“ என தெரிவித்தார்.