28,000 கி.மீ/மணி வேகம்: விண்வெளி யில் தொங்கியபடி நாசா வீரர்கள் த்ரிலிங் ஆபரேஷன்; திக் திக் வீடியோ!

28,000 கி.மீ/மணி வேகம்: விண்வெளி யில் தொங்கியபடி நாசா வீரர்கள் த்ரிலிங் ஆபரேஷன்; திக் திக் வீடியோ!

விண்வெளி நிலையம் மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றிப் பறந்து கொண்டிருக்கும் போதே, விண்வெளியின் வெற்றிடத்திலும் புவிஈர்ப்பு விசை இல்லாத சூழலிலும் இந்த த்ரில்லிங் ஆபரேஷன் நடந்துள்ளது.

பூமியில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் உயரத்தில், விண்வெளியின் வெற்றிடத்தில் புவிஈர்ப்பு விசையே இல்லாத சூழலில், அதுவும் மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருக்கும் விண்வெளி நிலையத்தின் மேல் ஏறி வேலை செய்வதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அசாத்திய த்ரில்லிங் சாதனையைத்தான் நாசா விண்வெளி வீரர்கள் இருவர் விண்வெளியில் நிகழ்த்தி உள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையத்தின் மிக முக்கியமான ‘கனடார்ம்2’ என்ற ராட்சத ரோபோடிக் கரத்தைப் பழுதுபார்ப்பதற்காக நாசா வீரர்கள் செவ்வாய்க்கிழமை விண்வெளியில் அதிரடியாகக் களமிறங்கினர்.

கனடா விண்வெளி முகமையால் உருவாக்கப்பட்ட இந்த 17.6 மீட்டர் நீளமுள்ள 'கனடார்ம்2' ரோபோடிக் கரம், விண்வெளி நிலையத்தின் ‘சூப்பர் மேன்’ என்று சொல்லலாம். விண்வெளிக்கு வரும் சரக்கு விண்கலங்களை அப்படியே கைகளால் பிடித்து நிலைநிறுத்துவது, விண்வெளி வீரர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குத் தூக்கிச் செல்வது என அனைத்து முக்கியமான வேலைகளையும் இதுதான் செய்கிறது. கடந்த மே 27 அன்று ரோபோடிக் கரத்தின் மணிக்கட்டுப் பகுதியில் திடீரென ஒரு கோளாறு ஏற்பட்டு, நகர முடியாமல் போனது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளியில் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பதால் தேய்மானம் மற்றும் பழுது ஏற்படுவது இயல்பானதுதான் என நாசா தெரிவித்தது. இதையடுத்து, விண்வெளி நிலையத்திலேயே ஸ்பேர் பார்ட்டாக வைக்கப்பட்டிருந்த ஒரு புதிய மணிக்கட்டுப் பகுதியை எடுத்துக்கொண்டு, பழுதடைந்த பழைய பாகத்தை மாற்றுவதற்காக விண்வெளி வீரர்கள் கிளம்பினர்.

நாசா விண்வெளி வீரர்களான கிரிஸ் வில்லியம்ஸ் மற்றும் ஜெசிகா மெய்ர் ஆகிய இருவரும் விண்வெளி நிலையத்தின் ‘க்வெஸ்ட் ஏர்லாக்’ கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தனர். இந்திய நேரப்படி மாலை சுமார் 6:05 மணிக்குத் தொடங்கிய இந்த ஆபரேஷன், திட்டமிடப்பட்ட 6.5 மணி நேரப் பயணமாகும். விண்வெளி நிலையத்தின் ஒட்டுமொத்த வரலாற்றில் இது 280-வது விண்வெளி நடைப்பயணம் (Spacewalk) என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணியின் போது, அடையாளம் காண்பதற்காகச் சிவப்பு நிறக் கோடுகள் கொண்ட விண்வெளி ஆடையைக் கிரிஸ் வில்லியம்ஸும் (இவருக்கு இது 2-வது விண்வெளிப் பயணம்), சாதாரண விண்வெளி ஆடையை ஜெசிகா மெய்ரும் அணிந்திருந்தனர்.

விண்வெளியில் நடப்பது என்பது விண்வெளி வீரர்கள் செய்யும் பணிகளிலேயே மிக மிக அபாயகரமானது. விண்வெளி நிலையத்தோடு ஒரே பாதுகாப்பு கயிற்றால் மட்டுமே தங்களைப் பிணைத்துக் கொண்டு, மிதக்கும் சூழலில் (Microgravity) மிகத் துல்லியமாக கையாண்டு அவர்கள் வேலை செய்ய வேண்டும். சிறிய தவறு நடந்தாலும் விண்வெளியில் தொலைந்து போகும் அபாயம் உண்டு. இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிவடைவதன் மூலம், அந்த ராட்சத ரோபோடிக் கரம் மீண்டும் தனது முழு பலத்தைப் பெறும். இதன் மூலம் விண்வெளி நிலையத்திற்கு வரும் அடுத்தடுத்த விண்கலங்களை வரவேற்கவும், அங்கு நடக்கும் அதிநவீன அறிவியல் சோதனைகளுக்கும் எந்தத் தடையும் இருக்காது.