போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் ஷிரான் பாசிக்கின் ரூ.3 கோடி சொகுசு வீடு முடக்கம்! – பொலிஸார் அதிரடி நடவடிக்கை

போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் ஷிரான் பாசிக்கின் ரூ.3 கோடி சொகுசு வீடு முடக்கம்! – பொலிஸார் அதிரடி நடவடிக்கை

இலங்கையின் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கிற்குச் சொந்தமான சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு வீடொன்றின் பயன்பாட்டை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

பொரலஸ்கமுவ பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடிகளைக் கொண்ட நவீன சொகுசு வீடே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த வீட்டிற்குள் அதன் உரிமையாளர்களோ அல்லது வேறு நபர்களோ நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸாரின் விசாரணைகளின்படி, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு இந்த வீடு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் தனது தந்தையின் பெயரில் இந்த வீட்டை வாங்கிய ஷிரான் பாசிக், பின்னர் அதனைத் தனது முதல் மனைவியின் மகளின் பெயருக்கு மாற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ஷிரான் பாசிக் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.