8 இலட்சம் ரூபாவைச் செலவு செய்து ஆடம்பரமாகக் காதலர் தின கொண்டாடியவர் கைது
வீடுகளை உடைத்து தங்க நகைகளைத் கொள்ளையிட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த சந்தேக நபர் ஒருவர் கம்பஹா கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல்வேறு அடகு மையங்களில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி வீடு ஒன்றை உடைத்துத் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்து, அதிலிருந்து கிடைத்த 8 இலட்சம் ரூபாவைச் செலவு செய்து, பெப்ரவரி 14 ஆம் திகதி தனது மனைவியுடன் மிக ஆடம்பரமாகக் காதலர் தினத்தைக் கொண்டாடியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நிட்டம்புவ பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், 'ஐஸ்' போதைப்பொருளுக்குத் தீவிரமாக அடிமையானவர்.
தினசரி போதைப்பொருள் தேவைக்கான 50,000 ரூபாவைத் திரட்டுவதற்காகவே நிட்டம்புவ மற்றும் அத்தனகல்ல பகுதிகளில் தொடர்ச்சியாகக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் வாங்கிய உந்துருளி மற்றும் 11 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாது ஏற்கனவே 08 திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபருக்கு உதவிய மற்றுமொரு நபரும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.