யாழ்ப்பாண மக்களுக்கு எரிபொருளுக்கு QR முறை
யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தின் போது QR முறைமையை பின்பற்றுமாறு, வட மாகாண அதிபர் சங்கம், மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வட மாகாண அதிபர் சங்கத்தினர், மாவட்ட அரசாங்க அதிபரரை, அவரின் அலுவலகத்தில் சந்தித்து இதற்கான கோரிக்கை கடிதத்தினை கையளித்துள்ளனர்.
எரிபொருள் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள், நீண்ட வரிசைகள் மற்றும் ஒழுங்கின்மை ஆகியவை பொதுமக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் பெறுவதற்கு மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை தொடர்வதால், அதிபர்கள் ஆசிரியர்கள் தங்கள் கடமையை சிறப்பாக நிறைவேற்ற முடியாமல் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே சிறப்பாகக் கடமைகளை செய்வதற்கு எரிபொருள் விநியோகத்தை சீரமைத்து தேவைக்கேற்ப நியாய முறையில் பகிர்ந்தளிக்க QR நடைமுறையை மீண்டும் அமுல்படுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், எரிபொருள் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் குழப்பமடைய வேண்டாம் என மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் போதிய அளவு எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளமையினால் விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டாம் என மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.