உடைந்தால் தானாகவே ஒட்டிக் கொள்ளும் உயிருள்ள கட்டிடம்... மரம் போல கார்பனை உறிஞ்சும் சுவர்கள்
கட்டிடம் என்றாலே சிமெண்ட், மணல் வைத்து தான் கட்டுவார்கள். ஆனால், இங்கு ஒரு கட்டிடம் உடைந்தால் அதுவே ஒட்டிக் கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
கட்டிடம் என்றாலே செங்கல், சிமெண்ட் போன்ற பொருட்களை வைத்து தான் கட்ட முடியும். ஆனால், வழக்கமான எந்தவொரு கட்டுமானப் பொருட்களும் இல்லாமல், நம்மோடு சேர்ந்து சுவாசிக்கும் மற்றும் உடைந்தால் தானாகவே தன்னைச் சரிசெய்துகொள்ளும் ஒரு விசித்திரமான உயிருள்ள கட்டடத்தை விஞ்ஞானிகள் நிஜமாக்கியுள்ளனர். கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சி அமைப்பு, வெனிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சியில் இந்த அசாத்திய தொழில்நுட்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
சிமெண்ட் தேவையில்லை... தானாகவே சரியாகும்
இந்தத் தொழில்நுட்பத்தில் அதிநவீன த்ரீடி பிரிண்டிங் (3D Printing) முறையைப் பயன்படுத்தி கட்டடத்திற்கான வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் உள்ளே 'சயனோபாக்டீரியா' (Cyanobacteria) எனப்படும் கண்ணுக்குத் தெரியாத உயிருள்ள நுண்ணுயிரிகள் பாதுகாப்பாகச் செலுத்தப்படுகின்றன. இந்த பாக்டீரியாக்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான வெளிச்சம், ஈரப்பதம் மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவை சரியாகக் கிடைக்கும்படி இந்தச் சுவர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதனால், இந்தக் கட்டடம் வெறும் கல்லும் மண்ணுமாய் இல்லாமல் ஒரு தாவரத்தைப் போல நம்மைச் சுற்றி உயிருடன் இயங்கிக் கொண்டே இருக்கும். இந்த விசித்திரக் கண்காட்சியில் இருக்கும் உயிருள்ள கட்டட அமைப்பை ஒரு குழந்தை போலத் தினமும் பராமரிப்பதற்கென்றே பிரத்யேகமாக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுச்சூழலைக் காக்கும் கார்பன் உறிஞ்சி
இந்தக் கட்டடத்தின் மிக முக்கியமான பிளஸ் பாயிண்ட் என்னவென்றால், இது காற்றில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் திறன் கொண்டது. மரங்களைப் போலவே இந்த பாக்டீரியாக்களும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி கார்பனை இழுத்துக் கொள்கின்றன. மேலும், தங்களைச் சுற்றியுள்ள வேதிப்பொருட்களுடன் வினைபுரிந்து, கார்பனைத் திடமான கார்பனேட்டுகளாக மாற்றுகின்றன.
இந்த பாக்டீரியாக்கள் கலந்த ஹைட்ரோஜெல் கலவை, ஆரம்பத்தில் ஒரு கிராமுக்கு 2 மில்லிகிராம் கார்பனை மட்டுமே உறிஞ்சியது. ஆனால், 400 நாட்கள் கழித்துப் பார்த்தபோது, அது 26 மில்லிகிராம் கார்பனைத் தங்களுக்குள் இழுத்துக்கொண்டு வியக்க வைத்துள்ளது.
சவால்களும்... பிரகாசமான எதிர்காலமும்
தற்போதைய நிலவரப்படி, உலகிலேயே உயிருள்ள பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கட்டுமான அமைப்பு இதுதான். இருப்பினும், இதில் சில சவால்களும் உள்ளன. சுமார் 25 நாட்களுக்குப் பிறகு இந்த பாக்டீரியாக்களின் வளர்ச்சி வேகம் கொஞ்சம் குறைகிறது. எனவே, உலக வெப்பமயமாதலை இது உடனே தடுத்து நிறுத்திவிடும் என்று இப்போதே கூறிவிட முடியாது.
ஆனாலும், நாளாக நாளாக இந்த உயிருள்ள கட்டடப் பொருள் சாதாரண சிமெண்ட்டை விட அதிகப் பலத்தையும் உறுதியையும் பெறுகிறது. மிக முக்கியமாக, வழக்கமான சிமெண்ட் தயாரிப்பைப் போல இதில் எந்தவொரு நச்சு ரசாயனங்களும் வெளியேறுவதில்லை. இது 100% சுற்றுச்சூழலுக்கு உகந்தது.