யாழ். வடமராட்சி கடலில் மாயமான 4 கடற்றொழிலாளர்கள்: தீவிர தேடுதல் - அதிகாரிகள் அலட்சியப் போக்கு

யாழ். வடமராட்சி கடலில் மாயமான 4 கடற்றொழிலாளர்கள்: தீவிர தேடுதல் - அதிகாரிகள் அலட்சியப் போக்கு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கடற்பரப்பில் இரண்டு படகுகள் கவிழ்ந்து தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி இன்றைய தினமும் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காணாமல் போனவர்களை மீட்பதற்காகப் பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியிலிருந்து சுமார் 10 படகுகளும், முனை பகுதியிலிருந்து 10-க்கும் மேற்பட்ட படகுகளும் என 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சக கடற்றொழிலாளர்கள் இன்று அதிகாலை முதலே கடலுக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

 

சோகத்தில் மூழ்கிய வடமராட்சி 

முன்னதாக, நேற்று முன்தினம் புதன்கிழமை (27) கடலுக்குச் சென்ற இவர்களைத் தேடி சக கடற்றொழிலாளர்கள்சென்றிருந்த போதிலும், பலத்த காற்று மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர்.

யாழ். வடமராட்சி கடலில் மாயமான 4 கடற்றொழிலாளர்கள்: தீவிர தேடுதல் - அதிகாரிகள் அலட்சியப் போக்கு | 4 Fishermen Missing In Vadamaratchi Sea Jaffna

இந்த நிலையில், இன்று வானிலை சற்றே சாதகமாக உள்ளதால் தேடுதல் பணி முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை - முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற பின்வருவோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்: பாலச்சந்திரமூர்த்தி இராமகிருஸ்ணன் (வயது 54) மற்றும் அவரது மகனான இராமகிருஸ்ணன் ரவிராஜ் (கற்கோவளம்) கதிர்காமம் சோதிலிங்கம் (வயது 52) மற்றும் சுமியோம்பிள்ளை சுஜிக்குமார் (வயது 37) (முனை கடற்றொழிலாளர் சங்கம்) இவர்களின் நிலை என்னவென்று தெரியாததால், கடற்கரையோரம் திரண்டுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கண்ணீருடன் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இச்சம்பவத்தால் ஒட்டுமொத்த வடமராட்சி பிரதேசமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

கடற்றொழிலாளர்கள் கடும் அதிருப்தி

இதேவேளை, கடற்றொழிலாளர்கள் காணாமல் போனது குறித்து கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை பிரதிப் பணிப்பாளர் ஆகியோருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டும், கடற்படையினர் தேடுதல் பணியில் ஈடுபடவில்லை என உள்ளூர் கடற்றொழிலாளர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

யாழ். வடமராட்சி கடலில் மாயமான 4 கடற்றொழிலாளர்கள்: தீவிர தேடுதல் - அதிகாரிகள் அலட்சியப் போக்கு | 4 Fishermen Missing In Vadamaratchi Sea Jaffna

அரச தரப்பும் கடற்படையும் காட்டி வரும் இந்த அசமந்தப் போக்கைக் கண்டித்துள்ள கடற்றொழிலாளர்கள், தங்களின் சொந்தப் பொறுப்பிலேயே இன்றைய மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 

செய்தி - பூ.லின்ரன்