4 லட்சம் டன் எஃகு, கடலுக்கு நடுவே 55 கி.மீ நீளம்: ரூ.1.5 லட்சம் கோடியில் சீனா கட்டிய அசாத்திய 'கேபிள்' பாலம்

4 லட்சம் டன் எஃகு, கடலுக்கு நடுவே 55 கி.மீ நீளம்: ரூ.1.5 லட்சம் கோடியில் சீனா கட்டிய அசாத்திய 'கேபிள்' பாலம்

சீனா சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் (£15 Billion) செலவில், 9 ஆண்டுகால உழைப்பிற்குப் பிறகு கட்டிய 'ஹாங்காங்-ஜூஹாய்-மக்காவ்' பாலம், உலகிலேயே கடலின் மேல் கட்டப்பட்ட மிக நீளமான (55 கி.மீ) பாலமாகும்.

உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட பல அதிசயங்களைப் பற்றி நாம் கேட்டிருப்போம். ஆனால், கடலுக்கு நடுவே 55 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு பாலம், அதுவும் நிலநடுக்கம், சுனாமி, பயங்கர சூறாவளி என எதற்கும் அசையாத ஒரு பிரம்மாண்ட கட்டமைப்பு என்றால் நம்ப முடிகிறதா? சீனா அதனை நிஜமாக்கிக் காட்டியுள்ளது. அதுதான் உலகிலேயே மிக நீளமான கடல் பாலமான 'ஹாங்காங்-ஜூஹாய்-மக்காவ்' (Hong Kong-Zhuhai-Macau Bridge) பாலம். ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு இருக்கும் இந்த மாபெரும் பொறியியல் அதிசயத்தின் சுவாரசியமான பின்னணியை இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

ஹாங்காங், ஜூஹாய், மக்காவ் ஆகிய 3 முக்கிய நகரங்களும் தெற்கு சீனக் கடலால் பிரிக்கப்பட்டிருந்தன. இதற்கு முன்பு மக்கள் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், அலையடிக்கும் கடலில் ஒரு மணி நேரம் படகில் (Ferry) பயணிக்க வேண்டியிருந்தது. ஆனால், சீனா சுமார் 15 பில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 1.5 லட்சம் கோடி ரூபாய்) செலவழித்து, 9 ஆண்டுகால உழைப்பிற்குப் பிறகு இந்தப் பாலத்தைக் கட்டி முடித்தது. கடந்த 2018-ல் சீன அதிபர் ஷி ஜின்பிங் இதனைத் திறந்து வைத்தார். இப்போது அந்த 1 மணி நேரப் பயணம், வெறும் 40 நிமிட சொகுசு கார் பயணமாக மாறிப்போனது. இந்தப் பாலம் கட்டப்பட்ட முத்து நதி டெல்டா பகுதி, உலகின் மிக பரபரப்பான கடல் வர்த்தகப் பாதையாகும். தினமும் நூற்றுக்கணக்கான பிரம்மாண்ட சரக்குக் கப்பல்கள் இந்த வழியே வந்து செல்லும்.

பாலம் கட்டினால் பெரிய கப்பல்கள் எப்படி உள்ளே வரும்? என்ற கேள்விக்கு சீன இன்ஜினியர்கள் தங்களது அதிநவீன வடிவமைப்பால் விடை அளித்தனர். பாலத்தின் நடுவே ஜியுஜோவ், ஜியாங்காய், சிங்ஜோவ் என 3 இடங்களில் பிரமாண்ட கேபிள்களால் தாங்கப்படும் உயர்கோபுரங்கள் அமைத்தனர். இதனால் எவ்வளவு பெரிய ராட்சத கப்பலாக இருந்தாலும், பாலத்திற்கு அடியில் எந்த தடையுமின்றி ஜாவாஸாகக் கடந்து சென்று விடுகிறது. நிலம், கடல், வான் என எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் இந்தப் பாலம் ஒரு கலைநயம் மிக்கக் காட்சியாகத் காட்சியளிக்கிறது.

அடிக்கடி தாக்கும் கொடூரமான சூறாவளிகள், கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கம், கடல்நீரின் உவர்ப்புத்தன்மை எனப் பல சவால்களை எதிர்கொண்டுதான் இந்தப் பாலம் கட்டப்பட்டது. பாரிஸ் ஈபிள் டவர் போல 60 மடங்கு வலிமை. ஆமாம், இந்த ஒற்றைப் பாலத்தைக் கட்டுவதற்காக மட்டும் சுமார் 4,000,000 டன் எஃகு (Steel) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 'சீன வெள்ளை டால்பின்கள்' (Chinese white dolphin) எனப்படும் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. பாலத்தின் தூண்களால் கடல் நீர் ஓட்டமும், டால்பின்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, கடலுக்கு அடியில் ஒற்றைத் தூண் பியர்களை (Single-column piers) மட்டுமே அமைத்து இயற்கைக்கும் மதிப்பளித்துள்ளனர் இன்ஜினியர்கள்.

துவக்கத்தில் பல சவால்களால் தாமதமாகி 2018 அக்டோபரில் திறக்கப்பட்ட இந்தப் பாலம், இன்று அந்தப் பிராந்தியத்தின் மிக முக்கிய உயிர்நாடியாக மாறியுள்ளது. சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஹாங்காங் மற்றும் மக்காவ் பகுதிகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மட்டுமே இந்தப் பாலத்தின் வழியாக மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை 1 கோடியைக் (10 மில்லியன்) கடந்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தற்போது, தினசரி சராசரியாக 11,000 வாகனங்கள் இந்தப் பாலத்தைக் கடந்து செல்கின்றன. இமாலய உள்கட்டமைப்பு இலக்குகளை சீனா எப்படிச் சாத்தியமாக்குகிறது என்பதற்கும், உலகப் பொறியியல் துறைக்கும் இந்த ஹாங்காங்-ஜூஹாய்-மக்காவ் பாலம் ஒரு சவால் நிறைந்த பாடம்.