3 கோடி கொசுக்களைப் பறக்கவிடும் கூகுள்: பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணம் இதுதான்!
கூகுள் நிறுவனத்தின் 'டிக்பக் பிராஜெக்ட்' ஆதரவுடன், அமெரிக்காவின் புளோரிடா மற்றும் கலிபோர்னியாவில் சுமார் 3.2 கோடி பிரத்யேக கொசுக்களைப் பொது வெளியில் பறக்கவிட அனுமதி கோரப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் மிகப்பெரிய கொசு கட்டுப்பாட்டுச் சோதனையாக அமையவுள்ளது.
கொசுக்களோடு போர் தொடுக்க அமெரிக்காவில் விசித்திரமான சோதனை நடக்கப் போகிறது. வீட்டுக்குள்ள ஒரு கொசு வந்தாலே அடிக்க ஓடுறோம், ஆனா அமெரிக்காவுல 3 கோடி கொசுக்களைப் பொதுவெளியில பறக்கவிடப் போறாங்களாமே, என்ன கொடுமை சார் இது? என்று நீங்க கேட்பது புரிகிறது. ஆனால், தொழில்நுட்ப உலகின் ராஜாவான கூகுள் ஆதரவு பெற்ற விஞ்ஞானிகள், கொசுக்களைக் கொண்டே கொசுக்களை ஒழிக்கும் செம மாஸான ஸ்கெட்ச் போட்டுள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா, கலிபோர்னியா மாகாணங்களில் சுமார் 3.2 கோடி (32 மில்லியன்) பிரத்யேக கொசுக்களைப் பரப்ப விஞ்ஞானிகள் அனுமதி கேட்டுள்ளனர். அமெரிக்க வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய கொசு ஒழிப்பு சோதனையாக இருக்கப் போகிறது. கொசுக்களைப் பெருக்கப் போகிறார்கள் என்று பயப்பட வேண்டாம். இத்திட்டம் கொசுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அல்ல, அவற்றுக்கு 'எண்ட் கார்டு' (End Card) வைக்கத்தான். கூகுளின் 'டிக்பக் பிராஜெக்ட்' மூலம் ஆய்வகங்களில் கோடிக்கணக்கான ஆண் கொசுக்கள் வளர்க்கப்படுகின்றன. இவற்றுக்கு 'வோல்பாக்கியா' (Wolbachia) என்ற இயற்கையான பாக்டீரியா தொற்று ஏற்படுத்தப்படுகிறது.
இங்கேதான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. ஆண் கொசுக்கள் மனிதர்களைக் கடிப்பதில்லை. ஆமாங்க, நம்மைக் கடித்து இரத்தம் குடிப்பதும், டெங்கு, மலேரியாவைப் பரப்புவதும் பெண் கொசுக்கள் மட்டும்தான். ஆண் கொசுக்கள் பாவம், அவை தாவரச் சாறுகளை மட்டுமே குடித்து வாழ்பவை. விஞ்ஞானிகள் இந்த வோல்பாக்கியா பாக்டீரியா கொண்ட ஆண் கொசுக்களை மட்டும் காடுகளில் திறந்துவிடுவார்கள். இந்த ஆண் கொசுக்கள் வெளியில் உள்ள சாதாரண பெண் கொசுக்களுடன் இணையும்போது, அந்தப் பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் பொரிப்பதில்லை. இதனால், அடுத்த தலைமுறை கொசுக்கள் பிறப்பதே தடுத்து நிறுத்தப்படும்.
இது ஏதோ சும்மா பேப்பர்ல போட்ட திட்டம் கிடையாது பாஸ், ஏற்கனவே செம ஹிட்டான ஒரு ஃபார்முலா. கூகுள் நடத்திய ஆரம்பகட்ட சோதனையிலேயே சில பகுதிகளில் 95% கொசுக்கள் காலி செய்யப்பட்டன. சிங்கப்பூர் டெங்கு காய்ச்சலை ஒழிக்க இந்த முறையைப் பயன்படுத்திய ஒரே ஆண்டிற்குள், அந்தப் பகுதிகளில் டெங்கு பாதிப்பு 70% குறைந்தது. தற்போது காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா காய்ச்சல்கள் மிரட்டி வரும் வேளையில், சிங்கப்பூரின் இந்த வெற்றி உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்து உள்ளது. கூகுள் நிறுவனம் ஏற்கனவே 4 கண்டங்களில் 100 கோடிக்கும் அதிகமான வோல்பாக்கியா கொசுக்களைப் பறக்கவிட்டுப் டெஸ்ட் செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
நாம ஏன் இன்னும் ரசாயன லிக்விடையும், காயிலையும் பயன்படுத்தக் கூடாது என்பதற்கு விஞ்ஞானிகள் ஒரு ஷாக்கிங் காரணத்தைச் சொல்கிறார்கள். அண்மையில் வெளியான ஆய்வின்படி, கொசுக்களுக்குக் கற்கும் திறன் இருக்கிறதாம். நாம் ஒரே கெமிக்கலைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, கொசுக்கள் அந்த வாசனை பழகிப்போய், அதற்குப் பயப்படாமல் நம்மைக் கடிக்க பாய்ந்து விடுகின்றன. அதோடு, கெமிக்கல்களால் மற்ற நன்மை செய்யும் பூச்சிகளும் அழிகின்றன. இதனால்தான், இயற்கையான முறையில் கொசுக்களை மலடாக்கி அழிக்கும் இந்த உயிரியல் (Biological) வித்தையை விஞ்ஞானிகள் கையில் எடுத்துள்ளனர்.
அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (EPA) இந்தத் திட்டத்திற்கு ஜூன் 5-ஆம் தேதிக்குள் அனுமதி வழங்கினால், அமெரிக்கக் காடுகளில் 3 கோடி கூகுள் கொசுக்கள் சிறகடிக்கத் தொடங்கும். கொசுக்களைக் கொண்டே கொசுக்களை அழிக்கும் இந்த விசித்திரமான 'ஆபரேஷன்', மனித குலத்தை டெங்கு போன்ற கொடிய நோய்களிலிருந்து காப்பாற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.