வானில் தோன்றிய அரிய சிவப்பு நிற ஒளித் தூண்கள்: திபெத்தில் பதிவான அரிய வீடியோ வைரல்!
திபெத் பீடபூமியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இடிமின்னல் புயலின் போது, அதற்கு மேலே வான்வெளியில் பிரம்மாண்ட சிவப்பு ஒளித் தூண்கள் தோன்றி மறையும் அரிய வீடியோ வெளியாகி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திபெத் பீடபூமியில் ஏற்பட்ட பயங்கர இடிமின்னல் புயலின்போது, அதற்கு மேலே வான்வெளியில் பிரம்மாண்ட சிவப்பு ஒளித் தூண்கள் தோன்றி மறையும் வீடியோ வெளியாகி, ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 'ரெட் ஸ்பிரைட்ஸ்' (Red Sprites) என்று அழைக்கப்படும் இந்த அரிய வானிலை நிகழ்வு, விண்வெளியை நோக்கி நீளும் ராட்சத சிவப்பு நிறக் கரங்களைப் போலக் காட்சிளித்தது. இது ஒரு இயற்கை வானிலை நிகழ்வு என்பதை விட, ஏதோவொரு ஹாலிவுட் சயின்ஸ் பிக்ஷன் படத்தின் காட்சியைப் போலப் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
தீவிரமான இடிமின்னல் புயல் வீசிக்கொண்டிருந்தபோது பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில், அடர்ந்த மேகக் கூட்டங்களுக்கு மேலே பல முறை பிரகாசமான சிவப்பு நிற ஒளிக் கீற்றுகள் மேல்நோக்கி வெடித்துச் சிதறுவது துல்லியமாகப் பதிவாகியுள்ளது. 'ரெட் ஸ்பிரைட்ஸ்' என்றால் என்ன? பொதுவாக நாம் பார்க்கும் சாதாரண மின்னல்கள் மேகங்களுக்குள்ளேயோ அல்லது மேகங்களில் இருந்து நிலப்பரப்பை நோக்கியோ தான் பாயும். ஆனால், இந்த 'ரெட் ஸ்பிரைட்ஸ்' முற்றிலும் மாறுபட்டவை. இவை பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 50 முதல் 90 கிலோமீட்டர் உயரத்தில், வளிமண்டலத்தின் மிக மேல் அடுக்கில் (Upper atmosphere) உருவாகின்றன.
அறிவியலாளர்கள் இதனை 'தற்காலிக ஒளிரும் நிகழ்வு' என்று வகைப்படுத்துகிறார்கள். மேகங்களுக்குக் கீழே ஏற்படும் மிகச் சக்திவாய்ந்த மின்னல் வெடிப்புகள், வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் தீவிரமான மின்புலத்தை உருவாக்கும் போது இவை தூண்டப்படுகின்றன. இந்த மின் புலங்கள் அங்குள்ள நைட்ரஜன் மூலக்கூறுகளைத் தூண்டி, அவற்றுக்கே உரிய பிரத்யேகமான சிவப்பு நிற ஒளியை உமிழச் செய்கின்றன. இந்த 'ஸ்பிரைட்ஸ்' ஒளிக் கீற்றுகள் ஜெல்லிமீன் வடிவம், காரட் வடிவம், தூண்கள் மற்றும் கிளைகளாகப் பரவும் கரங்கள் எனப் பல்வேறு வடிவங்களை எடுக்கக்கூடியவை. தற்போது திபெத் வான்வெளியில் பதிவாகியுள்ள அரிய தூண் வடிவங்கள், இதுவரை கேமராவில் பதிவானவற்றிலேயே மிக ஆச்சரியமான வடிவமாகக் கருதப்படுகிறது.
வானில் பல கிலோமீட்டர் அகலத்திற்கு இவை பரந்து விரிந்தாலும், வெறும் மில்லி விநாடிகள் (Milliseconds) மட்டுமே நீடிக்கக்கூடியவை. இதனால், மனிதக் கண்களால் இவற்றை நேரடியாகப் பார்ப்பது என்பது மிக கடினம். இவை தோன்றி மறையும் இந்த அதிவேகக் குணம் காரணமாகவே, கடந்த சில தசாப்தங்கள் வரை ஸ்பிரைட்ஸ் பற்றிய விபரங்கள் உலகிற்கு தெரியாமல் இருந்தன. விமான ஓட்டிகள் பல ஆண்டுகளாக மேகங்களுக்கு மேலே இத்தகைய விசித்திர ஒளிகளைக் கண்டதாகக் கூறி வந்த போதிலும், 1989 ஆம் ஆண்டில் தான் இதற்கான முதல் புகைப் பட ஆதாரம் உலகிற்குக் கிடைத்தது. அதன்பிறகு, அதிவேக கேமராக்கள், குறைந்த ஒளியிலும் துல்லியமாகப் படம் பிடிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியால், விஞ்ஞானிகள் இந்த அரிய நிகழ்வுகளைத் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.
திபெத்தில் தெரியக் காரணம் என்ன? திபெத் பகுதி மிக உயர்ந்த கடல் மட்ட உயரத்திலும் ஒப்பீட்டளவில் தெளிவான வானத்தையும் கொண்டு இருப்பதால், வளிமண்டலத்தின் மேல் அடுக்கு நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கு இது மிகச் சிறந்த இடமாக விளங்குகிறது. இப்பகுதியில் உருவாகும் தீவிரமான இடிமின்னல் புயல்கள், ஸ்பிரைட்ஸை உருவாக்குவதற்கு தேவையான சக்திவாய்ந்த மின்னல்களை தோற்றுவிக்கின்றன. அதே நேரத்தில், இங்குள்ள மெல்லிய வளிமண்டலமும், குறைவான ஒளி மாசும் இந்த அரிய ஒளியை மிகத் துல்லியமாகக் காண உதவுகின்றன.
காண்பதற்குப் பிரமிப்பூட்டும் அழகைத் தாண்டி, இந்த ஸ்பிரைட்ஸ் அறிவியல் பூர்வமாக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இடிமின்னல் புயல் பூமியின் மேல் வளிமண்டலத்துடனும், விண்வெளி சூழலுடனும் எவ்வாறுதொடர்பு கொள்கின்றன என்பதை புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் இதைப் படிக்கின்றனர். மேலும், இவை வளிமண்டலத்தின் வேதியியல் மாற்றங்களில் செல்வாக்கு செலுத்துவதுடன், வளிமண்டலத்தின் பல்வேறு அடுக்குகளுக்கு இடையே மின் ஆற்றல் எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதற்கான முக்கியக் தடயங்களையும் வழங்குகின்றன. எது எப்படியோ, அறிவியலைத் தாண்டி, வான்வெளியில் தோன்றும் இந்த பிரம்மாண்ட குங்கும நிற ஒளிக் கீற்றுகள், இயற்கையின் மிகச் சிறந்த மற்றும் ரகசியமான அதிசயங்களில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.