யாழின் மூன்று தீவுகளில் எரிசக்தி திட்டங்கள்! அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார்.
அதன்படி, குறித்த மூன்று தீவுகளையும் பசுமை சக்தித் தீவுகளாக (Green Energy Islands) மேம்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எரிசக்தி அமைச்சுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள்
நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் தற்போது நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (HRES) திட்டங்களை மையமாக வைத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியின் போது இடைநிறுத்தப்பட்ட, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட எரிசக்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இது தவிர, கெரவலப்பிட்டிய முதல் கொழும்பு துறைமுகம் வரையிலான மின்சார பரிமாற்றக் கோடு, சம்பூர் - கப்பல்துறை மின்சாரத் திட்டங்கள் மற்றும் கூரை மேல் சூரிய சக்தித் திட்டம் உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய மின்சாரத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.