கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது!
இலங்கைக்குள் போதைப்பொருளை கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 20 கிலோகிராம் 'ஹஷிஷ்' என்ற போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்ற போதே இன்று (26.07.2026) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹஷிஷ் என்ற போதைப்பொருளின் மதிப்பு 201.89 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா நாட்டவர் கைது
கைது செய்யப்பட்ட குறித்த நபர் ஓவியராகப் பணிபுரியும் 27 வயதுடையவர் என்று காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர் கனடாவின் டொராண்டோவில் போதைப்பொருட்களை வாங்கியதாகவும், பின்னர் கத்தாரின் தோஹாவிற்குப் பயணம் செய்து, அதிகாலை 2:30 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் விமானம் QR-662 மூலம் இலங்கைக்கு வந்தடைந்ததாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இலங்கை சுங்க அதிகரிகள் அவரது பயணப் பைகளைச் சோதனையிட்டபோது, 80 கட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோகிராம் மற்றும் 117 கிராம் பழுப்பு நிற ஹஷிஷைக் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.