காணாமல் போன 96 வயது மூதாட்டியின் உடல், 17 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு

காணாமல் போன 96 வயது மூதாட்டியின் உடல், 17 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு

தனமல்வில, 21ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து காணாமல் போன 96 வயதுடைய பெண்ணின் சடலம் 17 நாட்களுக்குப் பின்னர் சாகினிவெவ பகுதியில்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் சாகினிவெவில் உள்ள குளத்து பாதுகாப்புப் பகுதியில் நேற்று (17.09.2026) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பெண் கடந்த 1ஆம் திகதி வீட்டில் இருந்தபோது காணாமல் போயுள்ளதாகவும், இது தொடர்பில் அவரது பிள்ளைகள் தனமல்வில தலைமையக காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 96 வயதுடைய முதாட்டி

பெண்ணைத் தேடும் நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்திருந்த போதிலும், அவரைத் தொடர்பான எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

காணாமல் போன 96 வயது மூதாட்டியின் உடல், 17 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு | Old Woman Who Had Gone Missing Found The Body

இந்நிலையில், நேற்று முற்பகல் சாகினிவெவ குளத்து பாதுகாப்புப் பகுதிக்கு விறகு வெட்டச் சென்ற சிலர் பெண்ணொருவரின் சடலத்தைக் கண்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற தனமல்வில காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில், கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போயிருந்த 96 வயதுடைய பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து குறித்த பெண் வசித்து வந்த வீடு சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறிகல வைத்தியசாலை

பெண் காணாமல் போய் 17 நாட்களுக்குப் பின்னர் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன 96 வயது மூதாட்டியின் உடல், 17 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு | Old Woman Who Had Gone Missing Found The Body

சம்பவ இடத்துக்கு வருகை தந்த வெல்லவாய நீதவான், நீதவான் விசாரணையை மேற்கொண்டதுடன், சடலத்தை மொனராகலை சிறிகல வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்து, மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மேலதிக பரிசோதனைகளுக்காக சடலம் மொனராகலை சிறிகல வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் மகன் தனது தாயின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது தாயார் குறித்த பகுதிக்குச் செல்வதற்கான எந்தவொரு தேவையும் இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பெண்ணின் மரணத்துக்கான காரணம் அல்லது சம்பவத்தில் ஏதேனும் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இது தொடர்பில் தனமல்வில தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.