திமுகவிற்கு எதிராக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றும் தவெக அரசு: ஆதவ் அர்ஜூனா - செந்தில் பாலாஜி இடையே வெடித்த மோதல்!

திமுகவிற்கு எதிராக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றும் தவெக அரசு: ஆதவ் அர்ஜூனா - செந்தில் பாலாஜி இடையே வெடித்த மோதல்!

திமுக ஆட்சிக்காலத்தில் உண்மையாக 603 டாஸ்மாக் கடைகளை மூடினோம். 

டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று பெரும் விவாதம் வெடித்தது. அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது;

நினைத்தால் ஒரேநாளில் மதுவிற்கு தடை

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா : தமிழ்நாட்டை 5 மண்டலங்களாக பிரித்தால், வட மண்டலத்தில்தான் டாஸ்மாக் விற்பனை அதிகம் நடக்கிறது. அங்கு வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் அதிகம் இருப்பதால் விற்பனை அதிகம் நடக்கிறது. 

கடந்த ஆட்சியில் இருந்த ஒரு அமைச்சர், உடல்வலிக்காக பலர் குடிக்கின்றனர் எனக்கூறுகிறார், விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள் உடல்வலி எனக்கூறி விட்டு மதுவை எடுத்துக்கொள்ள முடியுமா?

இன்று ஒரேநாளில் மதுவிற்பனையை தடை செய்யலாம் என்று நினைத்தால்கூட, பெண்களுக்கு எதிராகத்தான் அதன் விளைவு திரும்பும். இதை சரிசெய்ய மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும்.

சினிமாத்துறை, டாஸ்மாக் துறையில் ஊழல் நடந்துள்ளது. (ஆதவ் அர்ஜூனாவின் பேச்சால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.)

உடனே அமைச்சரின் பேச்சுக்கு பதிலளித்து செந்தில் பாலாஜி பேசினார். 

பெயரளவில், பேப்பர் அளவில் இல்லை, உண்மையாக 603 மதுக்கடைகள் மூடல்

செந்தில் பாலாஜி: திமுகவின் கொள்கையும் பூரண மதுவிலக்கே. அதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதனால்தான் படிப்படியாக 603 கடைகளை குறைத்தோம். அது வெறும் பெயரளவில், பேப்பர் அளவில் இல்லை. முழுமையாக அந்த கடைகள் மூடப்பட்டன.

அந்த பட்டியலை அமைச்சர் துறைசார்ந்த செயலர்களிடம் வாங்கிப் பார்த்துகொள்ளலாம். பொதுப்பணித்துறை அமைச்சர் ஊழல், ஊழல் என்றுக் கூறுகிறார். நான் ஒன்றை சட்டமன்றத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் வெறும் வழக்குகளை மட்டும்தான் தற்போது போட்டுள்ளீர்கள்.

உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் வெளிவரும்

திமுகமீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும். மக்களிடம் கெட்டப்பெயரை உருவாக்கவேண்டும் என்பதற்காக ஒரு மாயையை உருவாக்குகிறீர்கள். பூதக்கண்ணாடி போட்டு தேடுகிறீர்கள். இப்போது உங்கள் அரசு நடக்கிறது. நன்றாக விசாரிக்கலாம், தீவிர விசாரிக்கலாம், நீதிமன்றத்தில் உங்கள் ஆதாரங்களை சமர்பிக்கலாம். 

நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர்தான் யார் போட்டது தவறான வழக்கு, உண்மைக்கு புறம்பானது, திரித்து கூறப்பட்டது என்பது தெரியவரும். நீதிமன்றம் இறுதிமுடிவை எடுக்கும். கடந்த காலங்களில் தவறுகள் நடந்தது என்பதைப்போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, மக்கள் மத்தியில் கடந்த ஆட்சிக்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்த இந்த அரசு முயற்சிக்கிறது. 

நீங்கள் போட்டுள்ள இந்த வழக்கு உண்மைக்கு புறம்பானது. நீதிமன்றத்தில் இதை சட்டப்படி எதிர்கொண்டு, நீங்களும் எதிர்கொள்ளுங்கள், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபின் மக்களுக்கு புரியும்.