சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை குழு

சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை குழு

அனோஜன் சிவராசாவிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைப்பதற்கான முயற்சிகள் குறித்த சட்ட முன்னெடுப்புக்களுக்காக இரு ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட நால்வரடங்கிய விசேட இலங்கைக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை (05) சவுதி செல்லவுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனர்.

அனோஜனுக்கு பொது மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து இதன் போது ஆழமாக ஆராயப்படவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார். 

 

அனோஜன் விவகாரம்

தற்போது இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பொது மன்னிப்பிற்கான கோரிக்கையை எவ்வாறு சவுதி மன்னர் தலைமையிலான அரசாங்கத்திடம் முன்வைப்பது என்பது குறித்த சட்ட நடைமுறைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை குழு | The Death Sentence Imposed On Anojan Sivarasa

 

இது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட கடிதத்தையும் கொண்டு செல்லவுள்ளோம் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்தார்.

இக்குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சவூதி அரேபியாவிலுள்ள இரண்டு சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனோஜன் சிவராசாவின் விடுதலையை உறுதி செய்ய தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமஞ்ஞ மகா நிகாய மற்றும் அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் மனுவொன்றைக் கையளித்தனர்.

அவரது தண்டனையைக் குறைக்கக் கோரும் மேல்முறையீடொன்று சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர மட்டத்தில் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.