களுத்துறை இரட்டைக் கொலை: உதவி புரிந்த மூவர் கைது!
களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவரும் பெண் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்ட செய்யப்பட்ட சம்பவத்துக்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர், நேற்று (15) இரவு இந்த மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24, 26 மற்றும் 36 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் களுத்துறை தெற்கு மற்றும் அகலவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று, இரண்டு கைத்தொலைபேசிகள், ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.