உருத்திரபுரம் இளஞ் சிறுமியின் தற்*கொ*லையும், டிஜிட்டல் யுக அச்சுறுத்தலும் !!
இன்றைய டிஜிட்டல் உலகம் பெண்களுக்குப் புதிய வெளிகளைத் திறந்துவிட்டாலும், அதன் மறுபக்கம் வன்மமும் ஆபாசமும் நிறைந்த ஒரு நச்சுப் பாதையாகவே நீடிக்கிறது.
கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த 'சமரழகி' என்ற ஒரு பிஞ்சு உயிர், இணையவழி மிரட்டல்களுக்குப் பயந்து, உலக சிறுவர் தினமான அக்டோபர் 1ல் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சோகம் ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.
ஆனால், அதே இணையப் பக்கங்களில் எழும் பாலியல் வன்மங்களை மிதித்துக்கொண்டு முன்னேற முடியும் என்பதற்கு வாழும் சர்வதேச உதாரணமாகத் திகழ்கிறார் ஈழத் தமிழ் வம்சாவளி நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன்.
உலகப் புகழ்பெற்ற நெற்ஃபிளிக்ஸ் (Netflix) தொடர்களில் நடித்து புகழ்பெற்ற மைத்ரேயி, பொதுவெளியில் தான் ஒரு 'தமிழச்சி' என்று பெருமையுடன் அடையாளப்படுத்தியபோது, அவர் சந்தித்த இணையவழித் தாக்குதல்கள் மிகக் கொடூரமானவை. சிங்கள இனவாதக் கும்பல்களும், அவர்களின் ஆதரவாளர்களும் அவரது புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்தும், பாலியல் ரீதியாக வசைபாடியும் அவரைத் தனிப்பட்ட முறையில் முடக்க முயன்றனர்.
இலங்கை போன்ற நாடுகள் இன்னும் கடக்கத் தவிக்கும் இனவாத, பாலியல் சேற்றை சர்வதேசத் தளத்தில் மைத்ரேயி எதிர்கொண்டார். ஆனால், அவர் அந்தப் போலிப் பிம்பங்களுக்கும், ஆபாசக் கதைகளுக்கும அஞ்சி ஒடுங்கிவிடவில்லை.
"என் திறமையும், என் அடையாளமும் உங்களின் நச்சுத்தனமான கருத்துக்களால் அழிந்துவிடாது"
என்று மிரட்டியவர்களை நோக்கித் தன் கேள்விகளால் சாட்டையடி கொடுத்து, கம்பீரமாகத் தன் பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் துணிச்சல்தான் இன்று நம் மண் முழுக்க இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசரமாகக் கற்றுத்தரப்பட வேண்டிய பாடம்.
சமரழகியின் தற்கொலை என்பது வெறும் ஒரு மரணம் அல்ல, அது நம் சமூகத்தின் போலி ஒழுக்கவிதிகளுக்குப் பயந்து எடுக்கப்பட்ட ஒரு தற்காப்பு முடிவு. ஒரு புகைப்படத்தை மாற்றி இணையத்தில் பரப்பிவிடுவேன் என்று ஒரு கயவன் மிரட்டும் போது, "பரப்பிக் கொள், அது நான் அல்ல...அது உன்னுடைய வக்கிர புத்தி" என்று நிமிர்ந்து நிற்கும் தைரியத்தை நாம் நம் பிள்ளைகளுக்குக் கொடுக்கவில்லை.
இலங்கை போன்ற வளரும் நாடுகளில் நிலவும் 'கலாச்சாரக் காவல்' எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாகச் சித்திரிக்கிறது.
சமூகம் என்ன சொல்லுமோ? பெற்றோருக்கு அவப்பெயர் வந்துவிடுமோ?" என்ற பயமே சமரழகி போன்ற பிள்ளைகளைக் கிணற்றிலும், தூக்கிலும் தொங்க விடுகிறது. இதில் ஆண் வர்க்கத்தை மட்டும் குறை கூறிக் கொண்டிருப்பதில் பயனில்லை. தவறு செய்பவர்கள் எந்தப் பாலினமாக இருந்தாலும், அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும் தைரியத்தைப் பாதிக்கப்படும் அனைவர்க்கும் ஊட்ட வேண்டும்.
முற்போக்குச் செயற்பாட்டாளர் என பலராலும் போற்றப்பட்ட வனிதா போன்ற பலரின் மரணங்கள் இன்னும் விடை தெரியாத மர்மங்களாகவே உள்ள நிலையில், ஒரு தவறுக்கோ அல்லது அச்சுறுத்தலுக்கோ மரணத்தைத் தழுவுவது அநீதிக்கு நாம் தரும் வெற்றியாகிவிடுகிறது.
உலக சிறுவர் தினத்தில் அந்த மகளை இழந்த பெற்றோர் செய்த பாவம் தான் என்ன? அவர்கள் செய்த ஒரே பாவம், தங்கள் பிள்ளைக்கு "உலகமே எதிர்த்தாலும் நாங்கள் உன்னோடு நிற்போம்" என்ற அசைக்க முடியாத பாதுகாப்பை முன்கூட்டியே உணர்த்தத் தவறியதுதான்.
பெண்கள் தங்களுக்கு ஒரு அச்சுறுத்தல் வரும்போது பின்வாங்குவதை நிறுத்த வேண்டும். என் உடலையோ, என் புகைப்படத்தையோ வைத்து என்னை மிரட்ட நீ யார்? என்ற கேள்வியைக் கயவர்களின் முகத்திற்கு நேரே கேட்க வேண்டும். இணையப் புகார்களை அளிக்க சட்டரீதியான வழிகள் இலங்கை உட்பட உலகெங்கும் உள்ளன என்பதைப் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.
சமரழகி... என்று போர்க்களத்தின் கம்பீரமாகத் திகழ வேண்டிய பெயருடையவளின் தற்கொலை முடிவு துயரந் தருகிறது.
ஆனால், டிஜிட்டல் உலகின் போலிக் கயவர்களுக்காக அவள் தன் அரிய உயிரை மாய்த்துக் கொண்டாள். இனி ஒரு சமரழகி கூட இந்த மண்ணில் இத்தகு முடிவுகளை எடுக்க வேண்டாம் என்பதை பிள்ளைகளுக்கு சமூகம் கற்றுக் கொடுக்க வேண்டும்
மைத்ரேயி காட்டிய அந்தத் துணிச்சல், சவால்களைக் கடந்து போகும் அந்த வேகம், இணையத்து வன்மங்களைத் தூக்கியெறியும் அந்தத் திமிர் உள் நாட்டுப் பெண்களுக்கும் வர வேண்டும்.
அச்சுறுத்தல்களுக்குப் பயந்து தற்கொலை செய்வதை விடுத்து, அச்சுறுத்துபவர்களின் முகத்திரையைக் கிழித்து, சட்டம் மற்றும் சமூகத்தின் துணை கொண்டு அவர்களைக் கூண்டில் ஏற்றுவதே சமரழகியின் மரணத்திற்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
பெண்களே... இனி விடைபெறாதீர்கள், விழித்துக்கொண்டு கேள்வி கேளுங்கள்!