உலகின் பல்வேறு பகுதிகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் பயனாளர்கள் அதிர்ச்சி

உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் இன்று அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்று இருக்கின்றன. இத்தகைய ஊடகங்களில் நாள்தோறும் மணிக்கணக்கில் நேரம் செலவிடும் இளைய தலைமுறையினர் ஏராளம். 

 

அப்படி சமூக ஊடகங்களில் ஒன்றிப்போனவர்களுக்கு, அவற்றின் முடக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடும். அப்படி ஒரு நிகழ்வு இன்று அதிகாலை நடந்துள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் முடங்கின. 

 

இந்தியா உள்பட ஆசிய நாடுகளிலும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பகுதிகளில் ஒரே நேரத்தில் இந்த செயலிழப்பு நிகழ்ந்துள்ளது.  

 

இந்த நேரத்தில் வலைத்தள பயனாளர்களால் தங்கள் கணக்குகளை பயன்படுத்த முடியவில்லை. இதனால் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. 

 

எனினும் சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு இந்த முடக்கம் படிப்படியாக சீரடைந்தது. அதன்பிறகே சமூக வலைதள பயனாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.