
பழம்பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந்தேதி காலமானார்.
பழம்பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந்தேதி காலமானார். அவருக்கு வயது 74.
கேரளத்தைச் சேர்ந்த பத்மினியும் அவரது சகோதரி லலிதாவும் பரத நாட்டிய விற்பன்னர்கள். திருவாங்கூர்சகோதரிகள் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கிய இருவரும் 1951-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாயினர். இதையடுத்து வந்த எல்லா படங்களிலும் அவர்களது நடனம் நீக்கமற நிறைந்திருந்தது. முன்னதாக தனது 17-வதுவயதில் கல்பனா என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பத்மினி. அங்கு தொடர்ந்து வாய்ப்புக்கள் இல்லாததால் தமிழுக்கு வந்தனர்.
தமிழில் காலடி எடுத்து வைத்தது முதலே பத்மினி மாபெரும் வெற்றிகள் கண்டார். 'ஏழை படும் பாடு' படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடித்தார். சிவாஜியின் இரண்டாவது படமான பணம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். எம்ஜிஆர் உள்பட அந்த கால சூப்பர் ஸ்டார்களுடன் எண்ணற்ற படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, தாய்மொழி மலையாளத்திலும் சுமார் 250 படங்களில் நடித்துள்ளார் பத்மினி. தூக்குத் தூக்கி, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்கள் பத்மினிக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தன.
பின்னர் வாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்ததும் கேரளத்தைச் சேர்ந்த டாக்டர் ராமச்சந்திரனை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறினார். அங்கு நாட்டியப் பள்ளி நடத்தி வந்தார். 1981-ல் கணவரின் மறைவுக்குப் பின் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்து இங்கேயே வசித்து வந்தார். சில படங்களிலும் நடித்தார். 2006-ம் ஆண்டு பத்மினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்த அவர் செப்டம்பர் 24-ம்தேதி மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.