வேகமாகப் பரவும் கொரோனா – சபாநாயகர் விடுத்துள்ள எச்சரிக்கை

வேகமாகப் பரவும் கொரோனா – சபாநாயகர் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் அதிகரித்துள்ள கொவிட் 19 தொற்றுநோய் சூழலுக்கு மத்தியில் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுகாதாரப் பாதுகாப்பு விதிகளுக்கு அமைய நடந்துகொள்ள வேண்டுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டபோது விடுத்த விசேட அறிவிப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கமைய நாடாளுமன்றத்துக்கு வரும்போதும் நாடாளுமன்றத்தில் இருக்கும்போதும் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை கடுமையாகப் பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செயற்படும்போதும் அவற்றைப் பின்பற்றுமாறும் சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.

விருந்தினர்களை நாடாளுமன்றத்துக்கு அழைப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய அத்தியாவசியமான அரசாங்க அதிகாரிகளை மாத்திரம் நாடாளுமன்றத்துக்கு அழைக்குமாறும் சகல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் சாபாநாயகர் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக நாடாளுமன்ற பணியாட்கள் தொகுதியினர், ஒன்றிணைந்த சேவை பணியாளர்கள், நாடாளுமன்ற ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குனர்கள் உட்பட நாடாளுமன்றத்துக்கு வரும் சகலரும் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய நடந்துகொள்வது அத்தியாவசியமானது என்றும் சபாநாயகர் தனது அறிவிப்பில் தெரிவித்தார்.