இணையத்தில் லீக் ஆன சாம்சங் ISOCELL 600 எம்பி கேமரா சென்சார் விவரங்கள்

சாம்சங் நிறுவனம் 600 எம்பி கேமரா சென்சார் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாம்சங் நிறுவனம் ISOCELL 600 எம்பி கேமரா சென்சாரை உருவாக்கி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 108 எம்பி கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சாம்சங் புது சென்சார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

புதிய 600 எம்பி கேமரா சென்சார் 4கே மற்றும் 8கே ரெக்கார்டிங்கின் போதும் தெளிவான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்தகைய திறன் கொண்ட சென்சாரை உருவாக்க சாம்சங் இன்னும் பல்வேறு தடைகளை கடக்க வேண்டியுள்ளதாக தெரிகிறது.

 

அந்த வகையில், இந்த சென்சார் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக மேலும் சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. சாம்சங் தற்சமயம் உருவாக்கி வரும் ISOCELL 600 எம்பி சென்சார் 1/0.57 இன்ச் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. இது தற்போதைய சென்சார்களை விட அளவில் மிகப்பெரியது ஆகும்.

 

சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களில் 108 எம்பி பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் சாம்சங் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் மாடல்களில் 600 எம்பி கேமரா வழங்கப்படாது என்றே தெரிகிறது.