குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் கருணா

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் கருணா

யுத்த காலத்தில் 3000 வரையிலான படையினரை கொன்றதாக தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) வெளியிட்ட கருத்து தொடர்பாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக விநாயகமூர்த்தி முரளிதரன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)  முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் இடம்பெற்ற போரின்போது 2000 தொடக்கம் 3000 வரையிலான இலங்கை படையினரை, ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் கொன்றதாக கருணா தெரிவித்ததையடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என தென்பகுதியில் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

எனவே, இவ்விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நேற்று பணிப்புரை விடுத்திருந்தார்.

குறித்த பணிப்புரைக்கமையவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முன்னிலையாகுமாறு கருணா அம்மானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.