கொலைகள், தற்கொலைகள், விபத்துக்களில் மரணித்தவர்கள் விபரங்கள்...!

கொலைகள், தற்கொலைகள், விபத்துக்களில் மரணித்தவர்கள் விபரங்கள்...!

காவல்துறை ஊடகப் பிரிவுக்கு அறிக்கை இடப்பட்ட தகவல்களுக்கு அமைய வாகன விபத்துகளின் காரணமாக கடந்த ஆண்டில் 1844 பேர் உயிரிழந்தனர்.

2019 ஆம் ஆண்டில் வாகன விபத்துகளின் காரணமாக 2689 பேர் உயிரிழந்தனர்.

இதன்படி 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் வாகன விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800  ஆக குறைவடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே இதற்கு பிரதான காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் வாகன விபத்துகளின் காரணமாக கடந்த ஆண்டில் பலத்த காயங்களுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 5284 ஆக பதிவாகியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 7718 ஆக பதிவாகியுள்ளது.

இடம்பெற்ற விபத்துக்களில் அதிகமானவை, உந்துருளிகளின் மூலமாகவும், இதற்கு அடுத்தபடியாக மகிழுந்துகளின் மூலம் இடம்பெற்ற விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் காவல்துறை ஊடகப் பிரிவுக்கு அறிக்கையிடப்பட்ட தகவல்களுக்கு அமைய, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆண்டின் முதல் 10 மாதங்களில் 302 கொலைகள் பதிவாகியுள்ளன.

2019ஆம் ஆண்டு 479 கொலைகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ஆம் ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 2102 ஆண்களும், 540 பெண்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டில் வாகன விபத்துகள், தற்கொலைகள், மற்றும் கொலைகளின் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கையானது, கொரோனா தொற்றினால் அந்த ஆண்டில் மரணித்தவர்களின் எண்ணிக்கை விடவும் பாரிய அளவில் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.