
கொரோனா பரவல் - உலக நாடுகளில் இலங்கை 92ம் இடத்தில்...!
நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 58,000 ஐ கடந்துள்ளது
நேற்றைய தினம் 843 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 58,430 ஆக உயர்வடைந்துள்ளது.
பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 841 பேருக்கு நேற்று கொவிட்19 தொற்றுறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 54551 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த 2 பேருக்கும் கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், 8466 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றில் இருந்து மேலும் 423 பேர் நேற்று குணமடைந்தனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 49,684 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, சர்வதேச ரீதியில் கொவிட்-19 தாக்கநிலை தொடர்பான பட்டியலில் இலங்கை 92வது இடத்திற்கு முன்நகர்ந்துள்ளது.
நேற்றைய தினம் வரையில் குறித்த பட்டியலில் 93 ஆவது இடத்தில் பதிவாகியிருந்த இலங்கை, நேற்று பதிவான நோயாளர்களின் எண்ணிக்கையுடன் 92ம் இடத்திற்கு முன்நகர்ந்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா, ,வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் 368 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது.
இதன்போது வட மாகாணத்தில் 3 பேருக்கு தொற்றுறுதியானதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர் ஒருவருக்கும், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒவ்வொருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.