10 மாதங்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் தீர்த்த கிணறுகளை திறக்க அனுமதி

10 மாதங்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் தீர்த்த கிணறுகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளும் மூடப்பட்டன.

ஊரடங்கு தளர்வு காரணமாக ராமேசுவரம் கோவிலில் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். கடந்த 5 மாதமாக வழக்கம்போல் தரிசனம் நடந்து வரும் நிலையில், கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளோ கடந்த 10 மாதங்களுக்கு மேலாகவே திறக்கப்படாமல் மூடப்பட்டு கிடந்தன.

 


இதனால் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் தீர்த்தமாட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் தீர்த்த கிணறுகளை நம்பி வாழும் யாத்திரை பணியாளர்கள், தீர்த்த கிணறுகளை திறக்க தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் திறக்க அனுமதிக்கப்படுவதாகவும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் தீர்த்தமாடலாம் என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிவிப்புக்கு யாத்திரை பணியாளர்கள், கோவில் பகுதியில் தொழில் நடத்தும் வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இதுபற்றி கோவில் அதிகாரிகள் கூறுகையில், “கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள், கட்டுப்பாடுகளை பின்பற்றி பக்தர்கள் தீர்த்தமாட அனுமதிக்கப்படுவார்கள். தீர்த்த கிணறுகளுக்கு செல்லும் பாதைகள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பக்தர்கள் செல்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என்று கூறினர்.