
நிலையான விலையின் கீழ் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் வழங்கும் செயற்பாடு இன்று முதல்...!
அத்தியாவசிய நுகர்வு பொருட்கள் 27 க்கான நிலையான விலையின் கீழ் நுகர்வோருக்கு பொருட்களை வழங்கும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
லங்கா சதோச, கூட்டுறவு வர்த்தக நிலையங்கள் ஊடாக குறித்த பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய ஒரு கிலோகிராம் 106 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சிவப்பு அரிசி மற்றும் 105 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளை அரிசி என்பன ஒரு கிலோகிராம் 93 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன் 109 விற்பனை செய்யப்பட்ட வெள்ளை நாடு ஒரு கிலோகிராம் 13 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
சம்பா ஒரு கிலோகிராம் 21 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் கீரி சம்பா 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 105 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மா, 84 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 100 கிராம் தேயிலை 35 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராமை 165 ரூபாவுக்கும், பெரியவெங்காயம் ஒரு கிலோகிராமை 120 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும்.
மேலும் உள்நாட்டு உருளை கிழங்கு ஒரு கிலோகிராம் 36 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
செத்தல் மிளகாய் ஒரு கிலோகிராம் 55 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும்; தகரப்பேணியில் அடைக்கப்பட்ட 425 கிராம் மீன் 220 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதோடு, தாய்லாந்து நெத்தலி ஒரு கிலோகிராமை 125 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதோடு, 400 கிராம் பால் பைக்கற் 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
கைக்கழுவும் திரவம் 100 மில்லிலீற்றர் 250 ரூபாவுக்கும், முகக்கவசம் 14 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.
இதற்கமைய, தற்போது சகல லங்கா சதொச வர்த்தக நிலையங்களிலும் இந்த விலையின் கீழ் பொருட்களை விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்