
முழு கௌரவமும் கோட்டாபயவுக்கே வேறு எவருக்கும் கிடையாது: புகழாரம் சூடியுள்ள மஹிந்த!
ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பரவாமல் கட்டுப்பட்டுத்தியமைக்கான முழு கௌரவமும் ஜனாதிபதி கோட்டாபயவுக்கே உரித்தானதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புகழாரம் சூடியுள்ளார்.
பொதுப் பேரணி ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
ஜனாதிபதி கோட்டாபயவின் நேரடி முடிவுகள் மற்றும் பல சட்டங்களை சரியான முறையில் விதித்தமையாலேயே ஸ்ரீலங்காவில் கொரோனோ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
உலகில் எந்ததொரு நாட்டிலும் கொரோனாவை கட்டுப்படுத்த இராணுவம் அழைக்கப்படவில்லை.
ஸ்ரீலங்கா தான் முதன் முதலாக கொரோனா ஒழிப்பு பணியில் இராணுவத்தை ஈடுப்படுத்தி அவர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் அதனை வெற்றி கொண்டுள்ளது.
இத்தகைய செயற்பாடுகளால் கொரோனா வைரஸை ஸ்ரீலங்காவில் கட்டுபட்டுத்தியமைக்கான முழு கௌரவமும் ஜனாதிபதி கோட்டாபயவுக்கே உரித்தானது. வேறு யாருக்கும் இல்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.