
காதலுக்கு உதவி கேட்டவருக்கு அஜித் பட பாணியில் பாடம் புகட்டிய போலீஸ் கமிஷனர்
புனே போலீஸ் கமிஷனராக அமிதாப் குப்தா உள்ளார். இவர் டுவிட்டரில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு கொண்டு இருந்தார். அப்போது ஒருவர், தான் காதலிக்கும் பெண்ணிடம் காதலை ஏற்றுக்கொள்ள உதவி செய்யுமாறு போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை விடுத்தார். அந்த நபருக்கு கமிஷனர், பெண்களின் விருப்பம் இல்லாமல் அவர்களை தொல்லை செய்ய கூடாது என அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் வரும் ‘நோ மீன்ஸ் நோ' என்ற வசனத்தை கூறி பாடம் எடுத்தார்.
நேர்கொண்ட பார்வை படம், நடிகர் அமிதாப்பச்சன் நடித்து இந்தியில் வெளியான ‘பிங்க்' படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும்.
பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக... இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா காதலுக்கு உதவி கேட்ட நபரிடம் பதிலளித்து கூறியதாவது:-
துரதிருஷ்டவசமாக பெண்ணின் சம்மதம் இல்லாமல், எங்களால் எந்த உதவியும் செய்ய முடியாது. நீங்களும் அந்த பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது. அந்த பெண் ஒருநாள் உங்களின் காதலை ஏற்றுக்கொண்டால், எங்களின் வாழ்த்தும், ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும். ‘நோ மீன்ஸ் நோ'.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல பெண்கள் பாதுகாப்பு, ஹெல்மெட் பயன்பாடு, பொதுமக்களிடம் போலீசாரின் அணுகுமுறை உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்களின் கேள்விக்கு போலீஸ் கமிஷனர் பதில் அளித்து இருந்தார்.