
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சி: 58 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 17 ஆயிரத்தி 936 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 915 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரட்சி காரணமாக அவர்கள் குடிநீர் இன்றி கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியுடனான காலநிலை காரணமாக நிலத்தடி நீர் குறைவடைந்தும், ஆறுகள், குளங்கள், நீர்நிலைகள் நீர் வற்றியும் மக்களுக்கான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் ஊடாக கொள்கலன்கள் மூலம் குடிநீரை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் வரட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 கொள்கலன்கள் ஊடாக குடிநீரை விநியோகிக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.