கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை! நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது அமெரிக்கா
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை என அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மையம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் வீரியமடைந்து வருகின்றது. உலக அளவில் கொரோனா அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அந்நாட்டில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு முழு அளவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லலாம்.
குறைந்த எண்ணிக்கையானோர் ஒன்றுகூடும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.
சிகை அலங்கார நிலையம் மற்றும் சினிமா அரங்கம் போன்ற இடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை.
அமெரிக்க மக்கள் தொகையில் இதுவரை 29 சதவீதம் பேர் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளதாகவும், 40 சதவீதமானோர் முதல் செலுத்துகையை மாத்திரம் பெற்றுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கொரோனாவினால் வயோதிபர்கள் உயிரிழக்கும் தொகையும் 80 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தொிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொவிட்டுக்கு எதிராக மேற்கொண்ட பாரிய போராட்டத்துக்கு கிடைத்த ஒரு வெற்றியின் வெளிப்பாடாக இந்த முகக்கவச நீக்கத்தை கருதுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்