காசா பகுதியில் ஹமாஸ் போராளிகள்-இஸ்ரேல் ராணுவம் இடையே கடும் மோதல்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான மோதலுக்கு மையமாக இருந்து வரும் கிழக்கு ஜெருசலேம் நகரில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சமீபத்திய நாட்களில் அதிக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
அங்கு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி தினந்தோறும் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்தனர்.
இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் பிற பகுதிகளை குறிவைத்து ராக்கெட்டுகளை வீசினர்.
இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் திங்கட்கிழமை இரவு காசா பகுதி மீது வான் தாக்குதல் நடத்தியது.
இதில் பெண்கள் சிறுவர்கள் உள்பட 22 பேர் பலியாகினர்.
இதனால் கோபமடைந்த ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் மீண்டும் காசா மீது வான் தாக்குதல் நடத்தியது.
காசாவில் இயங்கிவரும் ஹமாஸ் போராளிகளின் தலைமை அலுவலகத்தை இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசி தகர்த்தன. ஆனால், முன்னதாகவே கட்டிடத்திலிருந்து அனைவரும் வெளியேறிவிட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் தங்களின் தலைமை அலுவலகம் தகர்க்கப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது 130 ராக்கெட்டுகளை வீசியதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்தனர்.
ஆனால் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசியதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம், எனினும் 90 சதவீத ராக்கெட்டுகளை நடுவானிலேயே இடைமறித்து அழித்து விட்டதாக தெரிவித்துள்ளது.
எஞ்சிய ராக்கெட்டுகள் தலைநகர் டெல் அவிவ் மற்றும் அதன் அண்டை நகரங்களை தாக்கியதாகவும், உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 13 பேர் சிறுவர்கள் 3 பேர் பெண்கள் ஆவர். 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
அதேபோல் ஹமாஸ் போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதல்களில் இஸ்ரேலில் 3 பெண்கள் ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 95 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனிடையே ஹமாஸ் போராளிகள் மீதான இந்த தாக்குதல்கள் வெறும் தொடக்கம்தான் என இஸ்ரேலிய ராணுவ மந்திரி பென்னி கான்ட்ஸ் எச்சரித்துள்ளார்.
அதே போல் இஸ்ரேல் பதற்றத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என விரும்பினால் அதற்கு தாங்களும் தயார் என்று ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியே தெரிவித்துள்ளார்.