பாடசாலை வான்களில் ஏற்படவுள்ள மாற்றம்! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பாடசாலை வான்களில் ஏற்படவுள்ள மாற்றம்! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பாடசாலை மாணவர்களை அழைத்து செல்லும் வான்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது கட்டாயமாக்கி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் புதிய நாடாளுமன்றம் கூடும் போது, இது குறித்த புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை அழைத்து செல்லும் வான் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த திட்டம் குறித்து அமைச்சர் விவாதித்தார்.

விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளில் பாடசாலை வான்களுக்கு வண்ணக் குறியீட்டை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்க கொள்கை முடிவுக்கு ஏற்ப அனைத்து பாடசாலை வான்களும் மஞ்சள் வண்ணம் பூசப்பட வேண்டும் என்று தான் முன்மொழிந்ததாக அமைச்சர் மகிந்த அமரவீர கூறினார்.

எனினும், இதற்கு அதிக செலவு ஏற்படும் என தெரிவித்து பாடசாலை மாணவர்களை அழைத்து செல்லும் வான் சங்கங்களின் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து, எதிர்காலத்தில் பதிவுசெய்யப்பட்ட பாடசாலை வான்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள பாடசாலை வான்களில் மஞ்சள் நிற பட்டை இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.