தொடர்ந்து 4-வது வெற்றியை ருசிக்குமா சி.எஸ்.கே.: ஐதராபாத்துடன் இன்று பலப்பரீட்சை

தொடர்ந்து 4-வது வெற்றியை ருசிக்குமா சி.எஸ்.கே.: ஐதராபாத்துடன் இன்று பலப்பரீட்சை

பிளே-ஆஃப் சுற்றை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் என எதிர்பார்க்கலாம்.

 

புள்ளிகள் பட்டியலில் கம்பீரமாக முதல் இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், கடைசி இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு இந்த போட்டி கூடுதலாக ஒரு வெற்றி என்ற அளவிலேயே இருக்கும்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் 8-ல் வெற்றிபெற்று பிளே-ஆப் சுற்றை உறுதி செய்த நிலையில், புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து குவாலிபையர் 1-ல் விளையாட முயற்சிக்கும்.

 

கடந்த சீசனில் ஷார்ஜாவில் ஒவ்வொரு அணிகளும் ரன்களாக குவித்தது. ஆனால் இந்த சீசனில் ஷார்ஜா பேட்டிங்கு அவ்வளவு சாதமாக இல்லை. இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்றுள்ளது. ஆர்.சி.பி. 156 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ஸ்கோர். அதை சி.எஸ்.கே. சேஸிங் செய்துள்ளது. இரண்டு போட்டிகளில் சேஸிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் டாஸ் வென்ற அணி பந்து வீச்சை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

 

 

2-வது பகுதி ஆட்டங்களில் இரு அணிகளின் செயல்பாடுகள் குறித்து ஒரு அலசல்

 

சென்னை அணியின் பலம், பலவீனம்

 

சென்னை அணியை பொறுத்தவரைக்கும் 2-வது பகுதி ஆட்டத்தில் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தொடக்க பேட்ஸ்மேன்களான ருதுராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ்தான். மும்பைக்கு எதிராக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தனிஒருவராக நின்று 88 ரன்கள் விளாசினார். இவரது அதிரடியால் சி.எஸ்.கே. 156 ரன்கள் குவித்தது.

 

பெங்களூர் அணிக்கெதிராக 157 இலக்கை எட்டும்போது ருதுராஜ் கெய்க்வாட் 38 ரன்களும், டு பிளிஸ்சிஸ் 31 ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் குவித்தது. இதுவே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கொல்கத்தாவுக்கு எதிராக 172 இலக்கை எட்டும்போது இருவரும் அசத்தினர். ருதுராஜ் 40 ரன்களும், டு பிளிஸ்சிஸ் 43 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி 8.2 ஓவரில் 74 ரன்கள் சேர்த்தது.

 

மொயீன் அலி வர வேண்டும். அதிரடியாக விளையாட வேண்டும். இதற்காகத்தான் அவரை அணியில் வைத்துள்ளது சி.எஸ்.கே.   மும்பைக்கு எதிராக டக்அவுட் ஆனாலும் ஆர்.சி.பி.க்கு எதிராக 18 பந்தில் 23 ரன்கள், கொல்கத்தாவிற்கு எதிராக 28 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். சுழற்பந்து வீச்சாளரும் என்பதால் அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார்.

 

ஜடேஜா தனது அதிரடியால் அணிக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்து வருகிறார். மும்பைக்கு எதிராக 33 பந்தில் 26 ரன்களும், கொல்கத்தாவிற்கு எதிரகா 8 பந்தில் 22 ரன்களும் விளாசினார். கொல்கதாவிற்கு எதிராக இவரது அதிரடியால் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச்சென்றார். வெய்ன் பிராவோவும் அதிரடியாக விளையாடி குறைந்த பந்தில் அதிக ரன்கள் விளாசக் கூடியவர். இவர்கள் இருவரும் விரைவாக ரன்களை சேர்ப்பதற்கு சி.எஸ்.கே. அணிக்கு முக்கிய வீரர்களாக திகழ்கிறார்கள்.

 

மிடில் ஆர்டரில் களம் இறங்கும் அம்பதி ராயுடு, ரெய்னா ஆகியோர்தான் இன்னும் குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடவில்லை. தொடக்க வீரர்கள், ஜடேஜா அதிரடியால் இவர்களின் சொதப்பல் மிகப்பெரிய அளவில் தெரியவில்லை.

 

ஒருவேளை ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் தொடக்கத்திலேயே வெளியெறினால் இவர்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. மீதமுள்ள நான்கு போட்டிகளில் சிறப்பாக விளையாடி இவர்கள் மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டியது அவசியம். அப்போதுதான் பிளே-ஆஃப் சுற்றில் சென்னை 100 சதவீத நம்பிக்கையுடன் களம் இறங்க முடியும்.

 

கேப்டன் டோனி பேட்டிங்கில் 3, 11 (அவுட் இல்லை), 1 என மோசமாக விளையாடினாலும் தன்னுடைய சிறந்த கேப்டன்ஷிப்பில் அதை மறக்கடித்து விடுகிறார்.

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிராக புவி பந்தை ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் சிறப்பாக எதிர்கொண்டு, மிடில் ஓவர்களில் ரஷித் கானை சமாளித்துவிட்டால் சி.எஸ்.கே. அணியால் அதிக ஸ்கோர் குவிக்க முடியும்.

 

தீபக் சாஹர்

 

பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், வெய்ன் பிராவோ மிகப்பெரிய பலம். தீபக் சாஹர் புதுப்பந்தில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். வெய்ன் பிராவோ அணியில் இருந்தால், தீபக் சாஹரை முதல் 6 ஓவர்களில் மூன்று ஒவர்களை தொடர்ச்சியாக வீச வைத்து விடுவார் எம்.எஸ். டோனி. மும்பைக்கு எதிராக பவர்பிளேயில் தொடக்க ஜோடியை வீழ்த்தி அசத்தினார் தீபக் சாஹர்.

 

ஷர்துல் தாகூர் ஸ்விங், ஸ்லோ, நக்குல் பால் என விதவிதமான பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். அவர் மூன்று போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். வெய்ன் பிராவோ டெத் ஓவர் என அழைக்கப்படும் கடைசி நான்கு ஓவரில் சிறப்பாக பந்து வீசக்கூடியர். எவ்வளவு பெரிய பேட்ஸ்மேன்களாக இருந்தாலும், தனது பந்து வீச்சால் திணறடித்துவிடுவார். ஒருவேளை அவரது பந்து வீச்சு எடுபடவில்லை சி.எஸ்.கே. நெருக்கடியை சந்திக்கும். இந்த மூன்று பேருக்கும் பக்கபலமாக ஜடேஜா, ஹேசில்வுட், மொயீன் அலி உள்ளனர்.

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பலம் மற்றும் பலவீனம்

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை பொறுத்த வரையில் இந்த சீசன் அவர்களுக்கு சிறப்பாக அமையவில்லை. 10 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிளே-ஆப் சுற்றை விட்டு வெளியேறிவிட்டது. இனிமேல் ஐதராபாத் அணி பெறும் வெற்றிகள் எதிரணிக்கு வேட்டு வைப்பதாக இருக்கும்.

 

ஐதராபாத் கேப்டன் வார்னரை மாற்றியது. வீரர்களை மாற்றியது. எந்த பலனும் கிடைக்கவில்லை. இறுதியாக வார்னரை அணியில் இருந்து தூக்கிவிட்டு ஜேசன் ராயை களம் இறக்கியது. ஐந்து தொடர் தோல்விக்குப்பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி 2-வது வெற்றி பெற்றது.

 

முதல் இரண்டு போட்டிகளில் வார்னர் 0, 2 என சொதப்ப ஜேசன் ராயை 3-வது போட்டியில் களம் இறக்கியது. அவர் 42 பந்தில் 60 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அத்துடன் அணிக்கு புத்துணர்ச்சி கொடுத்துள்ளார். கேன் வியல்லிசம்சன் 18, 1 என சொதப்பிய நிலையில் 3-வது போட்டியில் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் விளாசினார். அவர் ஃபார்முக்கு வந்துள்ளது அந்த அணிக்கு பலமே.

 

ஆனால், மற்றொரு தொடக்க பேட்ஸ்மேனான சகா இன்னும் குறிப்பிடத்தகுந்த வகையில் ரன் குவிக்கவில்லை. மேலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக சொதப்பல். மணிஷ் பாண்டே (17, 13), கேதார் ஜாதவ்  (3, 12) முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பியதால் 3-வது போட்டியில் நீக்கப்பட்டனர். 

 

ஜேசன் ராய்

 

வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஹோல்டர் கடைசியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். ஜேசன் ராய் தீபக் சாஹர் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பொறுத்த ஐதராபத் அணியின் பவர்பிளே ஸ்கோர் அமையும். என்றாலும் தொடக்க ஜோடி, கேன் வில்லியம்சன் ஆகியோர் எவ்வாறு பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பொறுத்துதான் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ஸ்கோர் அமையும். 

 

பந்து வீச்சை பொறுத்தவரைக்கும் புவி, ரஷித் கான் ஆகிய நட்சத்திர வீரர்களை கொண்டுள்ளது. என்றாலும் இருவரும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. புவி மூன்றி போட்டிகளில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ரஷித் கான் 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இவர்களுடன் ஹோல்டர், கலீல் அகமது அல்லது சித்தார் கவுல் சிறப்பாக பந்து வீசினால் மட்டுமே நெருக்கடியை அளிக்க முடியும்.

 

ஒட்டு மொத்தத்தில் ஒரு அணியாக இணைந்து சிறப்பாக செயல்படுவது அவசியம்.