பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது – மஹிந்த அமரவீர தெரிவிப்பு
கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறைவடையலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்களின் நாளாந்த வருமானம் குறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் பேருந்துகளினால் வழங்கப்படும் சேவையைப் பாராட்ட வேண்டும் எனவும், இலங்கைப் போக்குவரத்து சபையினால் மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவையை முழுமையாக வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரச பேருந்துகள் மற்றும் ரயில் கட்டணங்கள் எந்தவகையிலும் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், பேருந்துக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தால், அதற்கான அனுமதியை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் பெற வேண்டும எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், இன்று நடைபெறவுள்ள அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்