இலங்கையில் கொரோனா ஆபத்து அதிகம்! அமுலுக்கு வரும் மற்றுமொரு தடை
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ள கூடிய மற்றுமொரு நடவடிக்கையாக, யாசகம் கேட்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கை தனியார் பேருந்துகள் மற்றும் ரயில்களில் யாசகம் கேட்பதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ரயில்வே திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பொது போக்குவரத்து சேவை வழங்கும் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கொரோனா பரவுவதனை தடுப்பதற்கு எடுக்க கூடிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.
சில யாசகர்கள் டிக்கட் பெற்று பேருந்து மற்றும் ரயில்களுக்குள் நுழைந்து சிறிது சென்ற பின்னர் யாசகம் கேட்பதாக அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு யாசகர்களின் செயற்பாடு தடையை ஏற்படுத்த கூடும் என்பதனால் இது தொடர்பில் அவதானம் செலுத்தி பேருந்து மற்றும் ரயில்களில் யாசகம் கேட்பதனை தடை விதிக்குமாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.