கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய சகோதரர்கள் கைது!

கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய சகோதரர்கள் கைது!

நானுஓயா காவல்துறை பிரிவிற்குட்பட்ட டெஸ்போட் தோட்டம் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் வீதியோரத்தில் வழிப்பிள்ளையாருக்கு முன் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

வழக்கம் போல் பூசகர் கோவிலுக்கு சென்று பார்த்த போது உண்டியல் திருட்டு போயிருந்ததை கண்டு அதுகுறித்து ஆலய நிர்வாகத்திடம் தெரிவித்து நானுஓயா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திருட்டு சம்பவம் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாகவும், அத்தோடு சந்தேகத்தின் பேரில் இப்பிரதேசத்தில் வசிக்கும் 14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தைத் திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

குறித்த இருவரும் சகோதரர்கள் எனவும், இவர்கள் உண்டியலை உடைத்த போது 5000/= பணம் இருந்ததாகவும் 4405/= ரூபாவினை செலவு செய்து விட்டு 595/= ரூபாய் பணம் மாத்திரம் எஞ்சியிருந்த நிலையில் அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதற்கு முன்னர் நானுஓயா டெஸ்போட் உள்ளிட்ட பல பகுதிகளிலும் திருட்டில் ஈடுபட்டு இவ்விருவர் மீது நானுஓயா காவல் நிலையத்தில் மூன்று முறைப்பாடுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நேற்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக நானுஓயா காவல்துறை பொறுப்பதிகாரி டபிள்யூ.ஜி.சி.ஜனக்க தெரிவித்தார் .

இந்தநிலையில், கடந்த ஒரு வாரமாக நுவரெலியா, லிந்துலை, நானுஓயா ஆகிய காவல்துறை பிரிவுகளிற்குட்பட்ட பல பகுதிகளில் உள்ள இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியல் பணமும், விக்கிரகங்களில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களும் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.