அமைதி ஒப்பந்தம் தொடர்பில் ஈரான் - அமெரிக்கா பேச்சு

அமைதி ஒப்பந்தம் தொடர்பில் ஈரான் - அமெரிக்கா பேச்சு

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்ட வரைபு ஒன்றைப் பெற்றுள்ளதாகவும், அது இன்று முதல் நடைமுறைக்கு வந்து ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ்  செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அந்த அறிக்கையின்படி, மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு கட்டமைப்பைப் பாகிஸ்தான் தயாரித்துள்ளது. 

இது நேற்றிரவு ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டது. 

இந்தத் திட்டம் இரண்டு கட்ட அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது என்றும், முதலில் உடனடி போர்நிறுத்தமும் அதைத் தொடர்ந்து ஒரு விரிவான உடன்படிக்கையும் எட்டப்படும் என்றும் விளக்கப்பட்டுள்ளது. 

ஆரம்பகட்ட புரிந்துணர்வு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமாக வடிவமைக்கப்படும் என்றும், பேச்சுவார்த்தைகளின் ஒரே தகவல் தொடர்பு ஊடகமாக இருக்கும் பாகிஸ்தான் ஊடாக இது இறுதி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாக ரொயிட்டர்ஸ் தெரிவித்துள்ளது. 

பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கும், முடக்கப்பட்ட வெளிநாட்டுச் சொத்துக்களை விடுவிப்பதற்கும் ஈடாக, அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்று ஈரான் உறுதியளிப்பதை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும் ரொய்ட்டர்ஸ் வௌியிட்டுள்ள இந்த செய்தி இருநாடுகள் ஊடாகவும் இதுவரை உத்தியோகப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. 

இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் 15 கப்பல்கள் ஈரானின் அனுமதியுடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படைப் பிரிவுடன் தொடர்புடைய ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் இந்த தகவலை வௌியிட்டுள்ளது. 

யுத்தம் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலையை விட தற்போது கப்பல் போக்குவரத்து 90% குறைவாகவே உள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி உட்பட சில அதிகாரிகள், இந்த முக்கியமான கடல்வழிப்பாதை மூடப்படவில்லை என்றும், அது எதிரி நாடுகளுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளதாகவும் பலமுறை கூறியுள்ளனர். 

உதாரணமாக, ஈரான் விதிக்கும் எந்தவொரு கட்டுப்பாடுகளிலிருந்தும் ஈராக் விலக்களிக்கப்படுவதாக ஈரானின் காதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் ஊடகப்பேச்சாளர் நேற்று அறிவித்திருந்தார். 

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு சுங்க வரி விதிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்தும் ஈரானிய அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். 

யுத்தத்தினால் ஏற்பட்ட அனைத்து சேதங்களையும் ஈடுசெய்ய, கப்பல் போக்குவரத்து மூலம் கிடைக்கும் சுங்க வரியின் ஒரு பகுதி பயன்படுத்தப்படும் போது ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்று ஈரானிய ஜனாதிபதி அலுவலகத்தின் உதவியாளர் ஒருவர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.