உணவு பொருட்களின் விலை குறைப்பு?

உணவு பொருட்களின் விலை குறைப்பு?

சமையல் எரிவாயு விலை குறைப்புக்கு அமைய, இன்று முதல், உணவுப்பொதி, கொத்து ரொட்டி, மற்றும் ப்றைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க உள்ளதாக, அகில இலங்கை சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
 

அண்மையில், மரக்கறிகள், கோதுமை உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்ட நிலையில், அவற்றின் இலாபத்தைப் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக, அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் விலை நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோகிராம் எடைகொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, ஆயிரத்து 290 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, அதன் புதிய விலை 3 ஆயிரத்து 990 ரூபாவாகும்.

5 கிலோகிராம் எடைகொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 516 ரூபாவால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 596 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை ஆயிரத்து 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 3 ஆயிரத்து 738 ரூபாவாகும்.

5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 402 ரூபாவால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 502 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 183 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 700 ரூபா எனும் புதிய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, புதுவருடத்தை முன்னிட்டு, நேற்று நள்ளிரவு முதல், வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு வாரத்திற்காக, பரிந்துரைக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்படுகிறது.

இதன்படி, முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கம், 5 லீற்றரில் இருந்து 8 லீற்றராகவும், உந்துருளிகளுக்கான எரிபொருள் ஒதுக்கம் 4 லீற்றரில் இருந்து 7 லீற்றராவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளுக்கு, 40 லீற்றரில் இருந்து 60 லீற்றராகவும், மகிழுந்துகள் மற்றும் சிற்றூர்திகளுக்கு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும், பாரவூர்திகளுக்கு 50 லீற்றரில் இருந்து 70 லீற்றராகவும், எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது.