நச்சுத்தன்மையான மீன் உண்டதால் அடுத்தடுத்து மரணங்கள்..! மட்டக்களப்பில் சோகம்...

நச்சுத்தன்மையான மீன் உண்டதால் அடுத்தடுத்து மரணங்கள்..! மட்டக்களப்பில் சோகம்...

மட்டக்களப்பு - மாங்காடு கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை (08) கடல் மீனினமான பேத்தை மீனை சமைத்து உட்கொண்டதால் சுகயீனமுற்று வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண்ணும் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வியாழக்கிழமை மாங்காடு பகுதியிலுள்ள கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய குறித்த மீன்கள் உண்பதற்குப் பொருத்தமற்றது என்பதை அறிந்து கடற்றொழிலாளர்கள் அதனை எடுத்து வீசியுள்ளனர். இந்நிலையில் அங்கு சென்ற ஒரு குடும்பத்தினர் இவ்வாறு கடற்றொழிலாளர்கள் வீசிய குறித்த மீன்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

நச்சுத்தன்மையான மீன் உண்டதால் அடுத்தடுத்து மரணங்கள்..! மட்டக்களப்பில் சோகம் (படங்கள்) | Deaths Due To Poisonous Fish Batticaloa

அப்போது இது சமைப்பதற்கு உகந்த மீன் இல்லை அதனை எடுக்க வேண்டாம், என குறித்த கடற்றொழிலாளர்கள் தெரிவித்ததையும் பொருட்படுத்தாது அந்த மீன்களை அவர்கள் எடுத்துச் சென்று அன்றைய தினம் மதிய உணவாகச் சமைத்து உண்டுள்ளனர்.

இதேவேளை, அன்றைய தினம் மாலை வேளையிலேயே அதனை உட்கொண்ட 4 பேரும் திடீர் சுகயீனமுற்ற நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 27 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

மற்றைய மூவரும் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய யூலியாமலர் எனும் பெண்ணும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அவர்கள் உட்கொண்ட உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், களுவாஞ்சிகுடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

இதேவேளை, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய பெண்ணும், மூன்றரை வயதுடைய ஆண் பிள்ளையும் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.